’ஒரே நாடு ஒரே தேர்தல்’ புதிது இல்லையாமே.. 1952 முதல் 3 தேர்தல்கள்.. பிறகு அரசு கைவிட்டது ஏன்? விபரம்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில் இந்த நடைமுறை இந்தியாவுக்கு புதிது அல்ல என்றும் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி வருகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே பாஜக அரசு இதுபோன்ற ஒரு தகவலை கிளப்பி விடுவதாகவும் பரவலாக பேச்சு அடிபடாமல் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இந்தியாவுக்கு புதிது கிடையாது. 1950 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்று வந்தது.
அதன்பிறகு தான் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் முறை தொடங்கியது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பேச்சு பலமாக அடிபட தொடங்கியுள்ளது. சரி 1967 ஆம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரே நேரத்தில் தேர்தல் முறை ஏன் கைவிடப்பட்டது என்ற விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 1951 ஆம் ஆண்டு முதல் 1967 வரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருமுறை ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்றது.
1952, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்றது. ஆனால், புதிய மாநிலங்கள் உதயமாகும் நடைமுறை தொடங்கியதாலும் சில மாநிலங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டதாலும் இந்த நடைமுறை கைவிடப்பட்டது. 1968-1969 ஆம் ஆண்டில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்ட பிறகு ஒரே தேர்தல் முறை முற்றிலுமாக கைவிடப்பட்டது.
அதன்பிறகு 1983 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற ஆலோசனையை மற்றும் ஆண்டு அறிக்கையை தேர்தல் ஆணையம் சமர்பித்தது. இந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விவகாரத்தை கையில் எடுத்து பேசி வருகிறது.












Click it and Unblock the Notifications