“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்!
மதுரை: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது என்றும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நேற்று மாலை, மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

ஸ்டாலின் பேட்டி
அதனைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி எழுப்பினர். சிபிஎஸ்இ-யில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள், அதுபற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை அது நடக்காது" என்றார்.
அதைத்தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, "சூப்பரா இருக்கு" என நம்பிக்கையோடு கூறினார் ஸ்டாலின். மேலும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பிரச்சாரம்
முன்னதாக நேற்று திருமங்கலத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல்தான் திராவிட மாடல்! மகளிரை முன்னேற்றும் மாடல்! இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மாடல்! முதியோர்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மாடல்! எல்லாவற்றிற்கும் மேல், அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான, மகத்தான மாடல்!
ஆனால், N.D.A. முன்வைப்பது வளர்ச்சியைக் கெடுக்கும் ஆரிய மாடல்! மதநல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடல்! மக்களைப் பிளவுபடுத்தும் ஆரிய மாடல்! இன்னும் சொன்னால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் வன்முறை மாடல்! அண்ணன் தம்பியாக - அக்கா - தங்கையாக உறவுமுறையோடு பாசமாக பழகும் மதுரை மக்கள் மிகவும் புத்திசாலிகள்! அதனால்தான், கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள். அதற்காக உங்கள் பாதங்களையெல்லாம் தொட்டு நான் நன்றி கூறுகிறேன்.
மதுரைக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? கறிதோசை, பரோட்டா என்று நன்றாக சாப்பிட்டோமா, வெயிலுக்கு இதமாக ஒரு ஜிகர்தண்டாவை குடித்தோமா, தெப்பகுளம் பக்கமாக காலார நடந்தோமா, கோயில் திருவிழாக்களை கொண்டாடினோமா என அமைதியை விரும்புகின்றவர்கள் நீங்கள். இதுதான் தமிழ்நாட்டின் D.N.A.! ஆனால், இதைச் சிதைக்க வேண்டும் என்று NDA துடிக்கிறார்கள்.
அவர்களின் அடிமைகளாக அ.தி.மு.க.வை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார் பழனிசாமி! அமைதியையும், வளர்ச்சியையும், சகோதர பாசத்தையும் முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் D.N.A.-வுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கும் - சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கட்சியாக NDA இருக்கிறது. இவர்கள்தான், டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று தமிழ்நாட்டுக்குள் வர நினைக்கிறார்கள்.
இவர்களின் இலட்சணம் என்ன? மதுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று எய்ம்ஸ் மருத்துவமனையை, 2015 பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டினார்கள். அதற்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தது; 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது; இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது! ஆனால், எய்ம்ஸ் மட்டும் வரவே இல்லை! மதுரை எய்ம்ஸ் பேப்பரில் இருக்கிறதே தவிர; நிஜத்தில் இல்லை! இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில், 2017-இல் அடிக்கல் நாட்டி, 2022-இல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிந்த அவர்களால், மதுரை எய்ம்ஸை ஏன் உருவாக்க முடியவில்லை?
இதுவே நம்முடைய திராவிட மாடலில் அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடத்தில் இதே மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகிவிட்டது. ஒன்றரை வருடத்தில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகிவிட்டது! ஒன்றரை வருடத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா உருவாகிவிட்டது! கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைத்து திறந்து வைத்துவிட்டோம். கோவையில் பெரியார் அறிவுலக நூலகம். திருச்சியில் காமராசர் நூலகம். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் நிகழ்ச்சியாக அதைத்தான் நான் திறக்கப் போகிறேன்.
பாஜகவுக்கு வெறுப்பு
ஏன் பா.ஜ.க.வால் நம்மை மாதிரி வேகமாக செயல்பட முடியவில்லை? ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ்நாடு மேல் இருக்கும் வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால்தான் கீழடி நம் தாய்மடி என நாம் கொண்டாடும் கீழடி ஆய்வறிக்கையை, இப்போது வரை வெளியிட மறுக்கிறார்கள். இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கியது என அறிவியல்பூர்வமாக நாம் நிரூபித்திருக்கிறோம். அந்த ஆய்வு முடிவை வெளியிட்டதற்கு பிரதமர் மோடி அவர்களோ, பா.ஜ.க. அரசோ ஒரு வாழ்த்து கூட இது வரை சொல்லவில்லை.
அண்மையில்கூட நம்முடைய மதுரைக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டோம். ஆனால், ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு கொடுத்தார்களே தவிர, மதுரைக்கும் - கோவைக்கும் மறுத்துவிட்டார்கள்! இப்படிப்பட்ட துரோக கூட்டணிதான் N.D.A! தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் செயல்படும் N.D.A.வின் சதித்திட்டங்களை வென்று, வளர்ச்சிப் பாதையில் நம்முடைய சாதனை பயணத்தை தொடர வேண்டும்!
பத்தாண்டுகாலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீரழித்தது அ.தி.மு.க.! அதற்கு துணை போனது பா.ஜ.க.! நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்! 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்!
பா.ஜ.க.வுக்கு திமுக மீதான கோபம் மட்டுமல்ல, அவர்களுக்கு தமிழ்நாடு மேலேயே வெறுப்புதான். இத்தனை நிதி நெருக்கடியை கொடுத்தும், பொருளாதார வளர்ச்சியில், ஜி.டி.பி. வளர்ச்சியில், தனிநபர் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணு பொருள் ஏற்றுமதியில், இப்படி எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன் ஆக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்! அதற்காக, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலத்தை பார்த்து, திவால் ஆகிவிடுவோம் என்ற ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது ரொம்ப 'டூ மச்'!" எனப் பேசினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications