காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 18 தொகுதிகளில் 16ல் மீண்டும் போட்டியிடுகிறது காங்கிரஸ். மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் போட்டியிடும் சீட்
இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுக தலைமையுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் நிர்வாகிகள், விருப்பப் பட்டியலையும் அளித்துள்ளனர். மற்ற கூட்டணிக் கட்சிகளிடமும் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை பெற்ற திமுக, தொகுதிகளை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள்
பொன்னேரி (தனி), வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
இந்த 16 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவை. கடந்த முறை 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அதில் தென்காசி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளை தவிர மற்ற 16 தொகுதிகளையும் அக்கட்சி மீண்டும் பெற்றுள்ளது.
விட்டுக் கொடுத்துள்ளோம் - செல்வப்பெருந்தகை
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "காங்கிரஸ் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம். தென்காசி, விருத்தாசலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக விட்டு கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications