592 வார்டுகளில் வெற்றி! 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் காங்கிரஸ்.. துளிர்க்கும் நம்பிக்"கை"
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 592 வார்டுகளில் வென்று காங்கிரஸ், அதிக வார்டுகளில் வென்ற கட்சிகளின் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தல் அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது.

திமுக கூட்டணி
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணியே அதிகப்படியான இடங்களில் வென்றுள்ளன. சுமார் 12,800 பதவியிடங்களை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மட்டும் 8693 வார்டுகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக திமுக மட்டும் 7,700 வார்டுகளில் கலக்கலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ்
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. மாநகராட்சிகளில் 164 வார்டுகள், நகராட்சிகளில் 632 வார்டுகள், பேரூராட்சிகளில் 1206 வார்டுகள் என மொத்தம் 2002 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. அடுத்து மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ளது.

மக்களவை & சட்டசபை
காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் இணைந்து பயணித்து வருகிறது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வென்று இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தது. அதேபோல கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் 18 தொகுதிகளை வென்று சட்டசபையில் 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்தது.

592 வார்டுகள்
இந்தச் சூழலில் தான், இப்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் 592 வார்டுகளில் வென்றுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அதிக வார்டுகளில் வென்ற கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ் 3ஆவது இடத்தில் உள்ளது. மாநகராட்சிகளைப் பொருத்தவரை காங்கிரஸ் 73 வார்டுகளில் வென்றுள்ளது. இது ஒட்டுமொத்த மாநகராட்சிகளில் 5.31% ஆகும்.

3ஆவது பெரிய கட்சி
அதேபோல நகராட்சிகளில் 151 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 368 வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 592 வார்டுகளில் காங்கிரஸ் வென்றுள்ளது. அதேநேரம் தனித்துக் களமிறங்கிய பாஜக மாநகராட்சிகளில் 230 வார்டுகள், நகராட்சிகளில் 56 வார்டுகள், பேரூராட்சிகளில் 22 வார்டுகள் என மொத்தமாக 308 வார்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications