திமுகவால் என்ன செய்ய முடியும்னு கேட்டீங்களே.. இது தான் பதில்.. காலரை தூக்கி விட்ட ஸ்டாலின்!
சென்னை: மாநிலக் கட்சியான திமுகவால் என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும், நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும், மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும், தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றம் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது. தேர்தலில் பழைய முறையே தொடரும், பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்றுள்ளன. காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள், பலராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழகத்தின் உரிமைகளை மீட்க, இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான திமுகவால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications