தவெக எம்எல்ஏ பாவமா.. ஜெம் வீரமணியை பாவம்னு சொல்வீங்களா? மாணிக்கம் தாகூரை விடாத செல்வப்பெருந்தகை!
சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று மாணிக்கம் தாகூர் தெரியாமல் சொல்லி இருப்பார் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். எப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் செல்ல பெருந்தகை நேருவுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செல்வப்பெருந்தகை பேசுகையில், நாடு சுதந்திரம் அடையும் போது ஒரு குண்டூசி கூட தயாரிப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருந்த இந்தியாவை, மிகச் சிறந்த நவீன தேசமாக கட்டமைத்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீல கொள்கை, அணிசேரா இயக்கம், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துறை தொழிற்சாலைகளை உருவாக்கியவர் நேரு.
தேசத்தை தலைநிமிர வைத்த பெருமை அவருக்கு உண்டு என்றார். தொடர்ந்து, தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை எட்டும் வகையில் முழுமையான திருப்தி அளிக்கும் நிலையில் அது இல்லை.
திரைப்படங்களில் பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் எளிதில் செயல்படுத்த முடியாது என்பதற்கு இந்த ஆறு மாத ஆட்சி ஒரு சாட்சி. செஞ்சியில் காணாமல் போன சிறுமியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின்படி, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது.
கடந்த கால அரசுகளைப் போலவே, தற்போதைய அரசும் சட்டப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, கர்நாடகத்தின் இத்தகைய முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என்று மாணிக்கம் தாகூர் தெரியாமல் சொல்லி இருக்கிறார்.
எப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என்று சொல்ல முடியுமா? மக்களுக்கு பிரச்சனை என்றால், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம். மாவட்ட ஆட்சியருக்கே பிரச்சனை என்றால், யாரிடம் மனு கொடுப்பது? கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா? தவெக அரசு எதை மூடி மறைக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
