கொளுத்தி போட்ட விஜய்.. பட்டாசாய் வெடித்த காங். நிர்வாகி! ஆட்சியில் பங்கு கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்
சென்னை: நேற்று நடந்து முடிந்த தவெக மாநாடு பல்வேறு விவாதங்களை கிளறியுள்ளது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற விஜய்யின் வாக்குறுதி, திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் எப்படி ஈர்ப்பது என அதிமுக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான், விசிக இதற்கான சிக்னலை செய்தது. முதல் சிக்னல், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு. ஆனால், இதைவிட ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிமுகவுக்கு பெருத்த நிம்மதியை ஏற்படுத்திவிட்டது.

மற்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அங்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு துணை முதல்வர் உட்பட பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லையே என விசிக வெடியை கொளுத்தி போட்டது. இந்த சமயத்தில்தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டார். இது குறித்து கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வராகலாம், 40 ஆண்டு காலம் அரசியலில் இருந்த திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வரை, ஆதவ் அர்ஜுனா அவதூறாக பேசிவிட்டதாகவும், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் நீண்ட நாள் கோரிக்கை என திருமாவளவன் விமர்சனங்களுக்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இப்படி இருக்கையில்தான் நேற்று விஜய் தனது மாநாட்டில், "எங்களை நம்பி வருபவர்களை கைவிட மாட்டோம். அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்" என்று உறுதியளித்திருந்தார். இது திமுகவின் கூட்டணி கட்சிகளை உசுப்பிவிடும் செயலாக பார்க்கப்பட்டது.
விஜய்யின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்திருந்தார். அதாவது, "ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என்று x தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காங்கிரஸின் தமிழ்நாடு கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மண்புமிகு முக ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்,
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள், நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026-ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும்.
தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன்உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications