விஜய் கட்சியால் காங்கிரஸில் விழுந்த முதல் விக்கெட்.. கூட்டணி அமைக்காததால் ராஜினாமா
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவிப்பதால் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகி உள்ளார். அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று ஒரு தரப்பாகவும், விஜயின் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என்று இன்னொரு தரப்பாகவும் காங்கிரஸ் கட்சி பிரிந்து நிற்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகையை எடுத்து கொண்டால் அவர் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று விரும்புகிறார். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து வருகிறது என்று அவர் தினசரி கூறி வருகிறார். இந்நிலையில் தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவிப்பதால் நிர்வாகி ஒருவர் கட்சியை விட்டு விலகி உள்ளார்.

அந்த நிர்வாகியின் பெயர் ஏபி சூர்ய பிரகாசம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் ஏபி சூர்யபிரகாசம் உள்ளார். இந்நிலையில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சூர்யபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுகவின் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பதை திமுக அரசே தன்னுடைய 2025 பட்ஜெட்ட அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது. அதனை மறந்து பிரவீன் சக்கரவர்த்தி உண்மைக்கு மாறாக திமுக அரசின் மீது பழி போடுவதாக கூறி அவரை வசைபாடுகிறார்.
வரும் தேர்தலில் வெகுஜன எதிர்ப்பினால் படுதோல்வி அடைய போகும் திமுகவோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசமன வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு, தவெகவோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரசாரின் நீண்ட கால கனவை நனவாக்க போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என்று ஊடகங்களில் வெளிப்படையாக அவமானப்படுத்தி உள்ளார்.
இப்படி அவமானப்படுத்திய செல்வ பெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய என் சுயமரியாதை இடம் கொடுக்காததால் இன்று முதல் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்வது மட்டும் அல்லாமல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications