பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளதால், காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட் கட்சி, மா.கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு அமைக்கப்பட்டது.

அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக ஒரு இடம் காலியாகியது.
தவெக
அந்த காலியிடத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய சட்டப்பேரவை பலத்தை கணக்கில் எடுத்தால், தவெக தலைமையிலான கூட்டணிக்கு அந்த இடத்தை எளிதாக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த மாநிலங்களவை இடத்தை தவெக தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிக்கு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது.
ஆரம்பத்தில் தவெக சார்பிலேயே ஒருவர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ்
குறிப்பாக தேர்தல் காலத்தில் கட்சிக்காக உழைத்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடம் ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் இருந்தது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சமீபத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர்
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களவை இடம் தொடர்பாக முதல்வர் சாதகமான பதிலை அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி
இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுடன் நல்லுறவை பேணுவதற்கும், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு வலுவான அடித்தளம் அமைப்பதற்கும் இந்த முடிவு உதவும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பவர் பிரவீன் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காங்கிரஸ் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் அவர், கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகித்தவர் என கருதப்படுகிறார். காங்கிரஸ் தலைமையும் அவரது பெயரையே பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு செல்லும் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இவர் காங்கிரஸில் இருந்தாலும் விஜய்க்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக - காங்கிரஸ் கூட்டணி
இந்த இடத்தை காங்கிரஸ் கைப்பற்றும் பட்சத்தில், மாநிலங்களவையில் அந்த கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மேலும் உயரும். அதே நேரத்தில், தமிழக அரசியலிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி உறவு மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிட்டு வருகின்றன. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரை எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
