திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி காங்கிரஸ் திட்டம் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் எம்பி செல்லக்குமார் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் தலைவராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதால் இந்த முடிவு எடுக்கப்படாலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களம் தற்போது கோடை காலத்திற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சத்தியமூர்த்தி பவனில் அடிக்கும் காற்று, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சாதகமாக இல்லை என்றே தெரிகிறது.

திமுக பாசமும்... மேலிடத்தின் அதிருப்தியும்!
தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதல், அவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற விமர்சனம் கட்சிக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது. "கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால் அதற்காக காங்கிரஸின் தனித்தன்மையை திமுகவிடம் அடகு வைக்கலாமா?" என சத்தியமூர்த்தி பவனின் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு ரகசிய ரிப்போர்ட்களை தட்டிவிட்டனர்.
இந்த புகார்களின் சாராம்சம் இதுதான்:
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து வளர செல்வப்பெருந்தகை முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
திமுக எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் 'ஆமாம் சாமி' போடுகிறார்.
கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை விட, அறிவாலயத்தின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திமுக காங்கிரசுக்கு குறைவான இடங்களை கொடுக்க பார்க்கிறது. ஆனால் டெல்லி காங்கிரஸ் அதிக இடங்களை கேட்கிறது. இதில் காங்கிஸின் டெல்லி தலைமைக்கு கட்டுப்படாமல்.. திமுகவின் பேச்சை செல்வப்பெருந்தகை கேட்கிறார். செல்வப்பெருந்தகை திமுகவின் அடிவருடியாக இருக்கிறார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் காங்கிரஸ் மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளன. குறிப்பாக,கூட்டணி பேரம் அல்லது தொகுதி பங்கீட்டில் திமுக பிடிவாதம் காட்டினால், அதைத் துணிச்சலாக எதிர்கொள்ள ஒரு 'கறார்' தலைவர் தேவை என டெல்லி கணக்கு போடுகிறது.
செல்லக்குமாருக்கு வந்த அவசர அழைப்பு!
இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. செல்லக்குமாருக்கு டெல்லியில் இருந்து வந்த 'அவசர அழைப்பு' தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. செல்வப்பெருந்தகைக்கு மாற்றாக, தமிழக காங்கிரஸ் கடிவாளத்தை செல்லக்குமாரிடம் ஒப்படைக்க மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
செல்லக்குமார் டெல்லி மேலிடத்திற்கு நெருக்கமானவர் என்பதோடு, திமுகவிடம் சமரசம் செய்துகொள்ளாத போக்கைக் கொண்டவர் என்ற இமேஜ் அவருக்கு உண்டு. ஒருவேளை திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்தால், கட்சியைத் தனித்து வழிநடத்த இவரே சரியான நபர் என்று டெல்லி கருதுவதாகத் தெரிகிறது.
உடையுமா காங்கிரஸ்? - தொண்டர்கள் கலக்கம்
தலைமை மாற்றம் என்பது வெறும் நபர் மாற்றமாக மட்டும் இருக்கப்போவதில்லை. இது தமிழக காங்கிரஸில் ஒரு பெரிய பிளவை உண்டாக்குமோ என்ற விவாதமும் எழுந்துள்ளது. செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் இந்த நகர்வுகளைக் கண்டு கொதிப்படைந்துள்ளனர்.
"தலைவரை மாற்றினால் அது திமுகவுடனான உறவை முற்றிலும் பாதிக்கும், அதுமட்டுமல்லாமல் கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து, தமிழக காங்கிரஸ் இரண்டாக உடையவும் வாய்ப்புள்ளது" என அவரது ஆதரவு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
சத்தியமூர்த்தி பவனில் இனி நடக்கப்போவது என்ன? டெல்லி எடுக்கப்போகும் அந்த 'அதிரடி' முடிவு காங்கிரஸை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா? காத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications