வானதியை பார்த்து செல்வபெருந்தகை கேட்ட கேள்வி.. காந்தியை சுட்டது யாரு.. காமராஜரை கொல்ல முயன்றது யாரு?
பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு காங். எம்எல்ஏ கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "கல்புர்கி, கவுரிலங்கேஸ்கர், காந்தியை கொன்றது யார் என்பதை வானதி சீனிவாசன் விளக்க வேண்டும்... அத்துடன் காமராஜரை கொலை செய்ய முயன்றது யார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை இன்று சட்டப்பேரவையில் கேட்டுக் கொண்டார்.
கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் வானதி நேற்று சட்டப்பேரவையில் தன்னுடைய முதல் உரையை நிகழ்த்தினார்... அப்போது உதயநிதியின் கன்னிப்பேச்சு என்ற சொல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் சொல்லும்போது,"முதல்முறை சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்களின் உரையை கன்னிப்பேச்சு என்று சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுகப்பேச்சு என்று சொன்னால் நாகரீகமாக இருக்கும்..

வார்த்தை
"கன்னி" என்கிற சொல் இளம் வயது பெண்ணை குறிக்கும் வார்த்தை.. என்னை பொறுத்தவரை அறிமுகப்பேச்சு எனக் குறிப்பிட்டால் அது நாகரிகமாக இருக்கும் என்றார். வானதியின் இந்த பேச்சு கவனத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார்.. ஆனால், தன்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்பு வானதி சீனிவாசன் வழக்கம்போல் பாஜகவை புகழ்ந்துவிட்டே பேச்சை துவக்கினார்..

பிரதமர்
அவர் சொல்லும்போது, "ரோஜாவுக்கு எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது.. அதுபோல, மத்திய அரசுக்கு எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதன் அதிகாரத்தை குறைக்க முடியாது... சமூகநீதிக்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம்" என்றார்.

ஆர்எஸ்எஸ்
அதுமட்டுமல்ல, "மக்களுக்காக தொண்டாற்றிய ஆர்எஸ்எஸ் நபர்கள் பல பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்" என்றும் சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.. இந்நிலையில், நேற்றைய தினம் வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு, இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில், காங்கிரஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது..

விளக்கம்
அக்கட்சியின் எம்எல்ஏ செல்வபெருந்தகை, "இந்த நாட்டில் எத்தனையோ பேர் பல சித்தாந்தங்களில் செயல்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது... கல்புர்கி, கவுரிலங்கேஸ்கர், காந்தியை கொன்றது யார் என்பதை வானதி சீனிவாசன் விளக்க வேண்டும்... அத்துடன் காமராஜரை கொலை செய்ய முயன்றது யார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications