”MRS சிறிசேனா” மோடியின் ஆங்கில அறிவே இதுதான்! பழைய வீடியோவை தேடியெடுத்து அண்ணாமலையை கலாய்த்த ஜோதிமணி
சென்னை: மிஸ்ஸஸ் சிரிசேனாவை M R S சிரிசேனா என்று படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். கடந்த 2 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். திராவிட ஆட்சி ஒரு கூடாரத்தை போன்று செயல்பட்டு வருகிறது.

சாதி கொடுமைகள்
2019 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 626 தீண்டாமை வழக்குகளில் 158 திருவாரூரில் பதிவானவை. சாதி அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் குறையாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

திமுக அமைச்சர்கள்
திமுகவை வீழ்த்துவது எளிது. திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று. அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது. திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். தொடக்க காலத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை உருவாக்கியதை போல தற்போது அக்கட்சி செயல்படுகிறது.

ஆங்கிலம் சர்ச்சை
தற்போதைய ஆட்சியில் திருச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் குறுநில மன்னர்களைபோல் உள்ளார்கள். கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை திராவிட அரசு பாதுகாப்பாக வைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒரு மைல் கல்லாக இருக்கப்போகிறது. 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏறக்கூட தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது." எனக் கூறினார்.

ஜோதிமணி கருத்து
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்வினையாற்றி இருக்கிறார். ட்விட்டரில் பிரதமர் மோடியின் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ள ஜோதிமணி, "அன்றைய இலங்கை அதிபர் Mr. சிரிசேனாவின் மனைவி Mrs சிறிசேனாவை,M R S சிறிசேனா என்று படிக்கின்ற ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?!" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications