தெருவில் இறங்கி போராடுவது மட்டுமே போராட்டமல்ல.. நாங்கள் பேசுவதும் போராட்டம்தான்.. கார்த்தி சிதம்பரம்
சென்னை: தெருவில் இறங்கி போராடுவது மட்டுமே போராட்டமல்ல, நாங்கள் பேசுவதும் போராட்டம் தான் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸில் எந்த கோஷ்டி மோதலும் இல்லை என்று கூறிய அவர், அனைவரும் ராகுல் காந்தி பின்னால் ஒன்றாக நிற்கிறோம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கேரளாவின் வயநாடு தொகுதி எம்பி-யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

தமிழக காங்கிரஸ் போராட்டம்
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை மீறியும், காங்கிரஸ் தொண்டர்கள் போராடி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயல். பிரதான அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்பதற்காக ஒரு போலி வழக்கை, இத்துப்போன வழக்கை போட்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே யாரும் இதுபோல் வழக்கு போட்டிருக்க மாட்டார்கள். 2019ல் கோலாரில் பேசியதற்காக குஜராத்தில் வழக்கு போட்டு, அதனை குற்றவியல் அவதூறு வழக்காக மாற்றியுள்ளனர்.

நீதி கிடைக்கும்
ராகுல் காந்தியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, தூங்கி கிடந்த வழக்கை, 15 நாட்களில் வேகப்படுத்தி தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இதனை நாங்கள் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் எடுத்து செல்வோம். இரு இடங்களிலும் எங்களுக்கு நீதி கிடைக்கும். ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதற்காகவே பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள் பெரியளவில் இல்லையே என்ற கேள்விக்கு, போராட்டம் என்பது நான் பேசுவதே போராட்டம் தான். என்னைப் போல் பலரும் பேசுவார்கள்.

தெருவில் போராடுவது மட்டுமே போராட்டமல்ல
தெருவில் இறங்கி போராடுவதே மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள். அதனை கண்டிப்பாக செய்து வருகிறோம். போராட்டங்கள் பல வடிவில் நடக்கும். கூட்டத்தை வைத்து எடை போட வேண்டாம். காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டி மோதலும் இல்லை. கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. அனைவரும் ராகுல் காந்தி பின்னால் ஒற்றுமையாக நிற்கும் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு செய்தி செல்கிறது
தொடர்ந்து, காங்கிரஸ் வளர்ச்சி மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை சிதைக்க வேண்டும், எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது, எதிர்த்து பேச யாரும் இருக்க கூடாது, பிரதமரை பற்றி யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. போராட்டத்தை பாஜக எவ்வளவு தடுத்தாலும், மக்கள் மனதில் செய்தி சென்றுக்கொண்டே இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications