ZOOM மீட்டிங் போட்டாலும் ஒன்னும் மாற்ற முடியாது.. காங்கிரஸ் மீது கரு. நாகராஜன் அட்டாக்
காங்கிரஸ் கட்சியை கரு நாகராஜன் விமர்சித்துள்ளார்
சென்னை: ஜூம் மீட்டிங்கில் பேசி விடுவதால் மட்டுமே காங்கிரஸ் கட்சி எதையும் மாற்றி விட முடியாது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பெகாசஸ் விவகாரம் பற்றி எரிந்தது.. அவையை நடத்தவிடாமல் தினம்தோறும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்பின.
பெகாசஸ் விவகாரம் பற்றி சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்துவது, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரே மாதிரியாகவும் செயல்பட்டன.

ஒற்றுமை
இதையடுத்து, எதிர்க்கட்சிகளிடம் காணப்படும் இந்த ஒற்றுமையை சீர்குலையாமல், அப்படியே வரப்போகும் எம்பி தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவை தோற்கடிப்பது என சோனியா காந்தி விரும்புகிறார்... அதனால்தான், இன்றைய தினம் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தேசிய அரசியல்
பாஜக அரசுக்கு எதிராக வியூகங்கள் இந்த ஆலோசனையில் வகுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஒருவித எதிர்பார்ப்பும், பரபரப்பும் தேசிய அரசியல் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணொலி மூலம் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சியின் இந்த ஆலோசனை கூட்டத்தை பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் விமர்சித்துள்ளார்..

தி.நகர்
மறைந்த மாவீரன் ஒண்டிவீரனின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கருநாகராஜன் தலைமையில், ஒண்டி வீரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், பாஜக மட்டும் தான் அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தி வருகிறது.. நெல்லையில் ஒண்டிவீரனுக்கு நினைவு மண்டபம் இருப்பது போல சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

பாராளுமன்றம்
இந்தியாவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு காணாமல் போய்விட்டது. இந்த ஜூம் மீட்டிங்கில் பேசி விடுவதால் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.. கூட்டத்தொடரில் பேசாமல் இப்போ பேசி என்ன பிரயோஜனம்? மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் எதையுமே பேசாமல், பொதுமக்கள் வரிப்பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து விட்டன என்றார்.












Click it and Unblock the Notifications