மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சியா? ஊழலின் ஊற்று.. ஆடம்பரம்..மனசாட்சி இல்லையா உங்களுக்கு!சாடிய காங்.,
சென்னை : ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப் பெரிய துரோகமாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மீண்டும் காங்கிரஸை குறிவைத்து பேசி லைம் லைட் அரசியலுக்குள் வந்திருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன். அப்படி என்ன தான் பேசினார்?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தோப்புபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை," திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார் என பேசியிருந்தார்.
மேலும், தங்களை பொறுத்தவரை மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி. காமராஜர் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தார். அதே போல் மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது" எனவும் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப் பெரிய துரோகமாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் அறியாமையை காட்டுகிறது.
காமராஜர் ஆட்சி பற்றி குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற நோக்கத்துடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தம்மை வருத்திக்கொண்டு பாதயாத்திரை மேற்கொண்ட அவரது தந்தை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி என்பது மக்கள் நலன் சார்ந்த தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லுகிற பொற்கால ஆட்சி ஆகும். இன்றைய நவீன தமிழகத்திற்கு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அடித்தளமிட்டவர் காமராஜர்.
அனைத்து துறைகளிலும் அனைத்து மக்களுக்கும் சமநிலைத் தன்மையோடு ஆட்சிமுறையை வழங்கியவர் காமராஜர். பொதுவாழ்வில் எளிமை, நேர்மை, தூய்மைக்கு இன்றைக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் திகழ்பவர் காமராஜர். ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும்.
பெருந்தலைவர் காமராஜரிடம் அனைத்து மக்களும் சொந்தம் கொண்டாடலாம். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் தங்கியிருந்த புது டெல்லி ஜந்தர் மந்தர் வீட்டின்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவர் வீட்டை எரித்து கலவரத்தில் ஈடுபட்ட பாரம்பரியத்தில் வந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் கூறுவது சரியா என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications