விஜய் மவுனம்.. இந்தியா கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்காத தவெக.. காங்கிரஸ் அதிர்ச்சி!
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் எந்த கருத்தும் கூறாமல் விஜய் மவுனம் காத்து வரும் நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்திலும் தவெக பங்கேற்காதது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கும் பிற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது. ஞானேஷ் குமாரின் முடிவுகள் குறித்து மற்ற தேர்தல் ஆணையர்கள் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்தியா கூட்டணி கூட்டம்
ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களுக்குள் முரண்பாடு என்ற விவகாரம் தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மற்றும் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா தாக்கரே, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன.
காங்கிரஸ் அதிர்ச்சி
ஆனால், இந்த கூட்டத்தில் தவெக பங்கேற்காதது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தவெகவிற்காக திமுகவை ஓவர் நைட்டில் காங்கிரஸ் கட்சி கழற்றிவிட்டு சென்றது. ஆனாலும் இந்தியா கூட்டணியில் இணையாமல் தவெக இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு தண்ணி காட்டி வருகிறது.
மோடிக்கு எதிராகவோ, பாஜகவை கண்டித்து பெரிதாக விஜய் பேசாத நிலையில், இந்தியா கூட்டணியில் இணையாமல் தொடர்ந்து போக்கு காட்டி வருவது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தல் ஆணையருக்கு எதிரான பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் கொடுத்து வரும் நிலையில், தவெக தரப்பிலோ விஜய்யிடம் இருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்கவில்லை.
மதிமுக, விசிக பங்கேற்பு
இந்த சூழலில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் தவெக சார்பில் யாரும் பங்கேற்காதது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.


Click it and Unblock the Notifications
