ஆளுநர் உரையை புறக்கணித்து காங், விசிக, மதிமுக, கம்யூ. வெளிநடப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கிய நிலையில் அவரை பேசவிடாமல் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக சட்டசபைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்டோர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநர் தனது உரையை தொடங்கினார். அவர் தமிழில் மதிப்பிற்குரிய பேரவைத் தலைவர் அவர்களே முதல்வர் அவர்களே சட்டமன்ற உறுப்பினர்களே என தொடங்கினார். இந்த கூட்டத் தொடரின் உரையை படிப்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.

வரப்புயர நீர் உயரும்
பின்னர் வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் ஔவையாரின் பாடலை பாடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் தனது உரையை தொடங்கிய போதிலிருந்தே அவரை பேசவிடாமல் திமுக கூட்டணி கட்சியினர்களான விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் கூச்சலிட்டனர். எங்கள் நாடு தமிழ்நாடு, ஆளுநரை திரும்ப பெறுக என கோஷங்களை எழுப்பினர்.

கூச்சல் குழப்பம்
ஆனாலும் அந்த கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஆளுநர் உரக்க பேசினார். இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். அப்போது தமிழ் குறித்து பல்வேறு விஷயங்களை பேசிய அவர் தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி என தெரிவித்தார்.

எதிர்ப்பு
இந்த கருத்துக்கு தமிழகத்தில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை மனதில் வைத்து இன்றைய தினம் ஆளுநர் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் இன்றைய தினம் ஆளுநர் உரையை தொடங்கியதுமே திமுக கூட்டணி கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் மனதில் வைத்து இந்த வெளிநடப்பு நடந்தது. பாமக எம்எல்ஏக்கள் பதாகைகளை ஏந்தி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரினர். எங்கள் நாடு எங்கள் நாடு தமிழ்நாடு, பிடிக்கவில்லை என்றால் வெளியேறு வெளியேறு ஆளுநரே வெளியேறு, திணிக்காதே திணிக்காதே ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கையை திணிக்காதே என கூட்டணி கட்சியினர் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications