கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி அரசியலை திறமையாக பயன்படுத்தி வெறும் ஐந்து மாதங்களில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. முதலில் திமுக கூட்டணியில் இருந்து ஒரு மாநிலங்களவை இடத்தையும், தற்போது தவெக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் முதல்வர் விஜய்யை ராகுல் காந்தி சிறப்பாய் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கின்றனர் அரசியர் பார்வையாளர்கள்.
கடந்த பிப்ரவரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அப்போது சட்டப்பேரவையில் இருந்த பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியால் 4 உறுப்பினர்களையும், அதிமுக கூட்டணியால் 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

அந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் பரபரப்பாக இருந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் மாநிலங்களவை இடம் கேட்டு அழுத்தம் கொடுத்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலங்களவை இடத்தை கோரியது.
மாநிலங்களவை
தொடக்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியில் கூட்டணியை காப்பாற்றும் வகையில் காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டது. அதன் மூலம் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் மாநிலங்களவைக்கு சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனித்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இல்லாததால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு வழங்கின. திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளித்தது.
காங்கிரஸ்
இதன் மூலம் புதிய ஆட்சியிலும் தனது செல்வாக்கை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது. இந்த சூழலில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காலியான ஒரு மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவையில் தவெக கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், அந்த இடத்தில் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாக இருந்தது.
முதல்வர் விஜய்
இதையடுத்து அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை தொடங்கியது. காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு முன்னதாக மூத்த தலைவர் ப. சிதம்பரமும் இந்த விவகாரம் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பிரவீன் சக்கரவர்த்தி
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு மிகக் குறுகிய நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு மாநிலங்களவை இடத்தை உறுதி செய்துள்ளது. தற்போது அந்த இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
பிரவீன் சக்கரவர்த்தி
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் கூட்டணி மாற்றங்கள் மற்றும் அரசியல் சமநிலைகளை மிக நுணுக்கமாக பயன்படுத்திய காங்கிரஸ், வெறும் ஐந்து மாதங்களில் இரண்டு மாநிலங்களவை இடங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை
திமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு இடத்தையும், பின்னர் தவெக தலைமையிலான ஆட்சியிடமிருந்து இன்னொரு இடத்தையும் பெற்றிருப்பது, மாநில அரசியலில் காங்கிரஸ் இன்னும் தனது பேரம் பேசும் திறனை இழக்கவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த புதிய மாநிலங்களவை இடம் உறுதியாகும் பட்சத்தில், மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பின ர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் வெறும் 5 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்திருந்தாலும், அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications