தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவர்... ஆராயும் கட்சி மேலிடம்... யாருக்கு வாய்ப்பு..?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிப்பது பற்றி கட்சியின் டெல்லி மேலிடம் ஆராயத் தொடங்கியுள்ளது.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் காங்கிரஸை தமிழகத்தில் வலிமைப்படுத்துவது குறித்த செயல்திட்டமும் விரைவில் வகுக்கப்படவுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுலிடம் மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி விரைவில் மாற்றப்படலாம் என செய்திகள் வெளிவரும் சூழலில், புதிய தலைவராக யாரை கட்சி மேலிடம் நியமிக்கும் என கதர்ச்சட்டையினர் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் திருநாவுக்கரசர் எம்.பி.யும் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற திட்டத்தோடு மாநில தலைவர் பதவிக்காக காய் நகர்த்தி வருகிறார்.

பெண் ஒருவர்
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை ஏன் தலைவராக நியமிக்கக் கூடாது என சிந்திக்கத் தொடங்கியுள்ளது டெல்லி. அவ்வாறு பெண் ஒருவரை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக நியமிக்கும்பட்சத்தில் விஜயதரணி பெயர் தான் பரிசீலனையில் முன்னணி வகிக்கிறது. தமிழக பாஜகவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக இருந்ததை போல் தமிழக காங்கிரசுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ.வை தலைவராக நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தைரியம்
விஜயதரணியை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர். அதுமட்டுமல்லாமல் துணிச்சலாக அரசியல் செய்யக்கூடியவர் என்பதால் ராகுல் மற்றும் சோனியாவின் சாய்ஸாக இருக்கிறார். இதனிடையே விஜயதரணிக்கு எதிரான புகார்களை ஒரு தரப்பினர் டெல்லிக்கு பறக்கவிடுவதால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.அழகிரி
சோனியா, ராகுல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள் பாராட்டை பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பெருவாரியான வெற்றியால் கே.எஸ்.அழகிரி மீது கட்சி தலைமை வைத்த நம்பிக்கை குறையவில்லை. இருப்பினும் கே.எஸ்.அழகிரியின் வயது, பாஜக புதிய தலைவர் அண்ணாமலையின் தடாலடி அரசியல் உள்ளிட்ட சில காரணங்களால் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications