ஓட்டக்கார பன்னீர்செல்வம் என்பது நான் தான்.. 'சதிகாரர்கள்'.. ராமநாதபுரத்தில் கெத்தாக பேசிய ஓபிஎஸ்
சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் வந்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.. தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலரை நிறுத்தினர்.. ஆனால் ஓட்டக்கார பன்னீர்செல்வம் என்பது நான் தான். சதிகாரர்களால், இன்னொரு ஓட்டக்காரத் தேவர் பன்னீர்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என ஓபிஎஸ் கூறினார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார். அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ள ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனியை விட்டுவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தற்போதைய எம்பியான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக வேட்பாளராக விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பா.ஜெய பெருமாள் போட்டியிடுகிறார். அவர்கள் இருவரை தாண்டி, ஓ பன்னீர்செல்வத்திற்கு அவர் பெயரே சிக்கலாகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதால் அதே பெயர் கொண்ட 6 பேரை, போட்டியிட களத்தில் இறக்கி உள்ளன அவருக்கு எதிரான கட்சிகள். இதனால் கலக்கம் அடைந்த ஓபிஎஸ், தன் பெயரே தனக்கு தற்போது சிக்கலாகி இருப்பதாக வேதனையில் இருக்கிறார்.
ராமநாதபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று பேசிய ஓ பன்னீர்செல்வம், "அதிமுக சார்பில் நான் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், ஒரு சுயேச்சை வேட்பாளராக, நிராயுதபாணியாக இப்போது நின்றுள்ள ஓ பன்னீர்செல்வத்துக்கு இவ்வளவு ஆதரவு அளிக்கிறீர்கள்.. அதற்காக, உங்கள் அனைவரது பாதம்தொட்டு வணங்குகிறேன்.
ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் வந்திருக்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் இங்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த சதி திட்டத்தை யார் வகுத்து கொடுத்தது? தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலரை நிறுத்தி உள்ளார்கள். ஆனால், ஓட்டக்கார பன்னீர்செல்வம் என்பது நான்தான். சதிகாரர்களால், இன்னொரு ஓட்டக்காரத் தேவர் பன்னீர்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த 6 பேருக்கான சின்னங்களாக வாளி,பலாப்பழம், திராட்சைக் கொத்து உள்ளிட்டவை இருந்தன. தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தைக் கேட்டால் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன்படி முதலில் ஒருவருக்கு வாளி கிடைத்தது. குலுக்கலில் பலாப்பழம் எனக்கு விழுந்திருக்கிறத,
பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழம் தான். அது முக்கனிகளில் ஒன்று. மக்களுக்கு புரதச் சத்துக்களைத் தருகின்ற சுவையான பழங்கள் இந்த முக்கனிகள். நேற்று (நேற்று முன்தினம்) நான் பிரச்சாரத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலாப்பழம் சின்னம் குலுக்கலில் வந்ததை எனக்கு தெரிவித்தார்கள்.. அடுத்த இரண்டு நிமிடங்களில் ஊர் முழுக்க எனது பலாப்பழம் சின்னம் வாட்ஸ் அப் மூலம் வேகமாக பரவிவிட்டது.
நாடு முழுவதுமே பிரதமர் மோடி தான் அடுத்த பாரத பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான அலை மக்களிடையே வீசிக்கொண்டிருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாபெரும் வெற்றி பெற போகிறது. அந்தக் கடலில் என்னையும் எனது வெற்றியையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ராமநாதபுரம் மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது.
காரணம் எதுவும் இல்லாமல், பாஜகவிற்கான ஆதரவை எடப்பாடி பழனிசாமி வாபஸ் வாங்கினார்? இதுபெரிய துரோகம். தன்னுடை ஆட்சிக் காலத்தில் பெற வேண்டியதை எல்லாம் நான்கரை ஆண்டுகளாக பெற்றுவிட்டு, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல், எடப்பாடி துரோகம் செய்துவிட்டார். எடப்பாடி, யாரால் நான்கரை ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் ஆட்சி செய்தார் என்பது எனக்கு தெரியும். கொஞ்சம்கூட நன்றி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications