கூட்டுறவு வங்கி 8.25%.. போஸ்ட் ஆபீஸ் 7.50%.. எங்கே பணம் போடலாம்? இந்த கணக்கை பாருங்க
சென்னை: போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் வட்டியைவிட கூட்டுறவு வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கிறதே.. அப்படியானால் பணத்தை கூட்டுறவு வங்கியிலேயே போட்டு வைக்கலாமா? என்ற கேள்வி வருவது இயல்புதான்... குறிப்பாக கிராமப்புறங்களில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நம்பி நிறைய பேர் சேமிப்பையும், கடன் தேவைகளையும் செய்து வருகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக மட்டும் பணத்தைப் போட்டு விடலாமா? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களின் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வட்டியைவிட கூடுதலாக 0.25% வட்டி கிடைக்கிறது. இதைப் பார்க்கும்போது, போஸ்ட் ஆபீஸில் 5 ஆண்டுக்கான டைம் டெபாசிட்டுக்கு கிடைக்கும் 7.50% வட்டியைவிட இது அதிகம் என்பது தெரிகிறது.

கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்
ஆனால் இங்கேதான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.. மத்திய அரசு நிறுவனமான போஸ்ட் ஆபீஸைவிட மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக வட்டி கிடைப்பது சாத்தியம்தான். அதற்காக அந்த வங்கியில் பணத்தைப் போடுவது தானாகவே பாதுகாப்பானது என்று அர்த்தம் கிடையாது...அதிக வட்டி என்பதையே ஒரே காரணமாக வைத்து முடிவு எடுக்கக் கூடாது.
நீங்கள் பணம் போட நினைக்கும் கூட்டுறவு வங்கியின் வரவு செலவு கணக்கை முதலில் பார்க்க வேண்டும். அந்த வங்கி தங்க நகைக்கடன், வீட்டுக்கடன் போன்ற பாதுகாப்பான கடன்களில்தான் அதிகமாக பணத்தை முதலீடு செய்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
பாதுகாப்பில்லாத கடன்கள்
பாதுகாப்பில்லாத கடன்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த வங்கியின் வாராக்கடன் எவ்வளவு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
வட்டி அதிகம் தருகிறார்கள் என்பதற்காக மட்டும் அந்த வங்கியைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியபடி உள்ளனர். அதேபோல அந்த கூட்டுறவு வங்கி 'டெபாசிட் இன்சூரன்ஸ் அண்டு கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' எனப்படும் DICGC காப்பீட்டின் கீழ் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் மக்களிடம் இருந்து பெறும் டெபாசிட் பணத்தை அப்படியே வைத்துக் கொள்வதில்லை. அந்தப் பணம் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களாக மீண்டும் வழங்கப்படுகிறது. இதற்கான நிதி தேவைக்கு நபார்டு உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்தும் நிதி பெறப்படுகிறது.
நகையை அடமானம் வைத்து கடன்
சரி.. பணத்தை சேமித்து வைப்பது ஒரு பக்கம். வீட்டில் தங்க நகை வைத்திருப்பவர்களுக்கு இதே கூட்டுறவு வங்கிகளில் இன்னொரு விஷயமும் முக்கியம். நகையை அடமானம் வைத்து கடன் வாங்கும்போது, ஒரு கிராம் தங்கம் இருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற கணக்கையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.10000 அல்லது அந்த தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம், இதில் எது குறைவோ, அந்த தொகைதான் கடனுக்கான வரம்பாக இருக்கும். அதாவது நகையின் எடை மட்டும் பார்த்து கடன் தொகையை கணக்கிட முடியாது... அதன் மார்க்கெட் மதிப்பும் இங்கு முக்கியம்.
உதாரணத்துக்கு 1 கிராம் தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.12000 என்று வைத்து கொள்வோம்.. அதில் 75 சதவீதம் ரூ.9000 ஆகும்.. அதனால் ஒரு கிராமுக்கு ரூ.10000 என்ற வரம்பு இருந்தாலும், அந்த நகைக்கு ரூ.9,000தான் கடன் பெறுவதற்கான வரம்பாக இருக்கும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
இதனால் நகைக்கடன் வாங்க நினைப்பவர்கள், தங்கத்தின் எடை எவ்வளவு என்பதை மட்டும் தெரிந்து கொண்டு போகாமல், அதன் சந்தை மதிப்பு எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், பணத்தை டெபாசிட் செய்ய நினைப்பவர்கள் வட்டி எவ்வளவு கிடைக்கும் என்பதை மட்டும் பார்க்காமல், அந்த வங்கியின் நிதிநிலை, வாராக்கடன், பாதுகாப்பான கடன்களின் அளவு, DICGC காப்பீடு ஆகியவற்றையும் பார்த்த பிறகே முடிவு செய்வது நல்லது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கிராமப்புற மக்கள், விவசாயிகள் என பலரும் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.. அவர்களுக்கு வட்டி விகிதமும் முக்கியம்தான்.. ஆனால் பணத்தின் பாதுகாப்பு அதைவிட முக்கியம். தங்கத்தை வைத்து கடன் வாங்கும்போதும், எவ்வளவு கிராம்? என்பதைவிட அதன் மதிப்பு எவ்வளவு? என்பதையும் கணக்கில் வைத்துக் கொண்டால் தேவையில்லாத குழப்பத்தை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..!!


Click it and Unblock the Notifications
