கூட்டுறவு வங்கி நகைக்கடன் உயர்வு? அதுவிடுங்க, தமிழகத்தில் புதுச்சேரி விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லையா
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகையை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களுக்கு முக்கியமான மாற்றம் வரப்போகிறது. ஒரு கிராம் தங்கத்துக்கு இப்போது வழங்கப்படும் ரூ.8000 கடன், விரைவில் 9000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்தபடி உள்ளன.. ஆனால், இதே கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய புதுச்சேரி விவசாயிகளுக்கு வேறு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் வரை கோரிக்கையும் வலுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானம் வைத்தால், ஒரு கிராம் தங்கத்துக்கு அதிகபட்சமாக ரூ.8000 வரை கடன் கிடைக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கூட்டுறவு வங்கி நகைக்கடன் உயர்வு?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.10,000 வரை கடன் கிடைக்கிறது. இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு வர, ஒரு கிராம் தங்கத்துக்கு வழங்கப்படும் கடனை ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக சுமார் 10 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இப்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தொகையை உயர்த்துவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள இதே கூட்டுறவு அமைப்புகளில் கடன் வாங்கிய புதுச்சேரி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்காத பிரச்சனை எழுந்துள்ளது.
புதுச்சேரி விவசாயிகள் வேதனை
புதுச்சேரியில் முன்பெல்லாம் நிறைய இடங்களில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆனால் நகரங்கள் விரிவடைய விரிவடைய பல விவசாய நிலங்கள் வீடுகளாகவும், அப்பார்ட்மெண்ட்களாகவும் மாறிவிட்டன... இதனால் விவசாயம் செய்ய போதுமான நிலம் இல்லாமல் புதுச்சேரி விவசாயிகள் தவித்து கொண்டிருக்கிறார்கள்..
அதனால்தான், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் நிலங்களை வாங்கி அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக நிறைய விவசாயிகள் தமிழக எல்லைப் பகுதிகளில் கரும்பு பயிரிடுகிறார்கள்.. அவர்கள் விளைவிக்கும் கரும்பு தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குத்தான் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், விவசாயம் செய்யும் நிலம் தமிழகத்தில் இருப்பதால், அங்குள்ள கூட்டுறவு விவசாயச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில்தான் இந்த விவசாயிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் வாங்குகின்றனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி
இதுவரை இந்த விவகாரத்தில் பெரிய பிரச்சனை இருந்ததாக விவசாயிகள் சொல்லவில்லை.. தமிழகத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி அல்லது நகைக்கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதெல்லாம், தமிழகத்தில் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்த புதுச்சேரி விவசாயிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். .
முந்தைய அதிமுக ஆட்சியிலும் சரி, அதன்பிறகு வந்த திமுக ஆட்சியிலும், விவசாயி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பார்க்காமல், தமிழக நிலத்தில் விவசாயம் செய்கிறாரா என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட்டார்களாம்.. ஆனால் இப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கடன் தள்ளுபடி திட்டத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் தனியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்று பகீர் புகார் எழுந்துள்ளது.
"நாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழகத்தில்தான் நிலம் வாங்கி விவசாயம் செய்கிறோம். தமிழக கூட்டுறவு வங்கியில்தான் கடன் வாங்குகிறோம்.. நாங்கள் விளைவிக்கும் கரும்பும் தமிழகத்தில்தான் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு செல்கிறது. அப்படியிருக்கும்போது கடன் தள்ளுபடி மட்டும் ஏன் எங்களுக்கு கிடைக்கக்கூடாது?" என்று வேதனையுடன் கேட்கிறார்கள் விவசாயிகள்.
முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆனந்த்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு தந்திருக்கிறார்கள்.. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரங்கசாமி, தமிழகத்தில் விவசாயம் செய்து வரும் புதுச்சேரி விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் அனுப்பியிருப்பதாக புதுச்சேரி சட்டசபையிலும் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தில் அமைச்சர் ஆனந்தும் உடனடியாக தலையிட வேண்டும் என்று புதுச்சேரி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரியில் இருந்து தமிழக அரசியலுக்கு வந்துள்ள ஆனந்த், தவெகவில் முக்கிய பொறுப்பிலும், தமிழக அரசில் அமைச்சராகவும் இருப்பதால், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அவர் உதவ வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500-க்கும் குறைவானவர்களே இருப்பதால், கடன் தள்ளுபடி வழங்குவதால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் கூடுதல் செலவு ஏற்பட்டுவிடாது என்பதால், தமிழக முதல்வர் விஜய் இந்த கோரிக்கையை பரிசீலித்து, விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்..!!!


Click it and Unblock the Notifications
