கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? இந்த 3 வாக்குறுதிகளையும் அரசு தருமா?
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது... குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளைத் தவணை முறையில் வெளியிட்டு ஆளும் தரப்பிற்கு நெருக்கடியை தந்துள்ளது.. இதையடுத்து, திமுக எந்த மாதிரியான தள்ளுபடியை செய்ய போகிறது? குறிப்பாக கூட்டுறவு சங்க நகை தள்ளுபடி, விவசாய தள்ளுபடி, கல்வி தள்ளுபடி போன்றவற்றில் எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன..!!
சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டிருந்தார்.. அதில் பலவிதமான அறிவிப்புகள் இருந்தாலும், 3 விதமான அறிவிப்புகள், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தன-..

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
"அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்., முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்" என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்..
இந்த அறிவிப்புகள் வெளியானதுமே, ஆளும் திமுக அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி மக்களிடையே எழ ஆரம்பித்துவிட்டது.. இதற்கு காரணம், கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சொன்ன வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியதால், மீண்டும் ஒருமுறை நகைக்கடன் தள்ளுபடி வருமா என்ற ஏக்கம் இல்லத்தரசிகளிடையே நிலவுகிறது.
கல்விக்கடன் தள்ளுபடி
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அடகு வைத்த சொத்துக்களை மீண்டும் பெற முடிகிறது. இது அக்குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வட்டி கட்டும் சுமையில் இருந்து அவர்களை விடுவிக்கிறது. எனவேதான் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..
அடுத்ததாக, மாணவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான கல்விக்கடன் தள்ளுபடி குறித்தும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை அரசு கல்விக்கடனைத் தள்ளுபடி செய்தால், அதன் நேரடிப் பலன் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்குக் கிடைக்கும்.
விவசாய கடன் தள்ளுபடி
வங்கிகளின் கடுமையான வசூல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவதுடன், அவர்கள் மன உளைச்சலின்றி தங்களின் தொழில் வாழ்க்கையைத் தொடங்க இது உதவும். குறிப்பாக, பின்தங்கிய சூழலில் இருந்து வந்து உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்கு இது ஒரு புதிய வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுக்கும். பெற்றோர்களின் தோள்களில் இருக்கும் ஒரு பெரும் சுமை இதன் மூலம் இறக்கி வைக்கப்படும்.
விவசாயக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை, அது தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இயற்கை சீற்றங்கள், பருவமழை பொய்த்தல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற காரணங்களால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி
இந்தச் சூழலில் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், விவசாயிகள் மீண்டும் புத்துயிர்ப்புடன் அடுத்த பருவச் சாகுபடிக்குத் தயாராக முடியும். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை சீரமைப்பதுடன், விவசாயிகளின் தற்கொலை போன்ற துயரச் சம்பவங்களைத் தடுக்கவும் வழிவகுக்கும்.
இப்படி ஒவ்வொரு தள்ளுபடி அறிவிப்பும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு பெரும் நிம்மதியை தரக்கூடியது என்பதால்தான், தேர்தல் சமயங்களில் அவைகளுக்கான எதிர்பார்ப்பு கூடுகிறது.. அதிமுகவின் மாற்றுத்திறனாளிகள் கடன் தள்ளுபடி மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கான வட்டியில்லா கடன் போன்ற அறிவிப்புகள் நேரடியாக விளிம்புநிலை மக்களை சென்றடையும்.
இடைக்கால பட்ஜெட்?
இதற்கு போட்டியாக திமுக அரசு வரப்போகும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரிலோ அல்லது தேர்தல் நெருக்கத்திலோ விவசாயக் கடன் அல்லது கல்விக்கடன் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த தள்ளுபடி அறிவிப்புகள் அனைத்தும் சாமானிய மக்களின் கைகளில் உபரிப் பணத்தை (Extra Cash) மிச்சப்படுத்துகின்றன. இதன் மூலம் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதுடன், அந்தப் பணம் மீண்டும் சந்தைக்குள் வருவதால் மாநிலத்தின் பொருளாதாரச் சக்கரம் தடையின்றி சுழல இது மறைமுகமாக பெரும் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications