ஆம்புலன்ஸிலேயே காத்து இருந்தனர்.. கொரோனாவால் நிரம்பும் மருத்துவமனைகள்.. சென்னையில் மோசமாகும் நிலை!
சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதால் தற்போது சென்னையில் மருத்துவமனைகளில் போதிய இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதால் தற்போது சென்னையில் மருத்துவமனைகளில் போதிய இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2757ல் இருந்து 3,023 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் சென்னையில்தான் 50% கேஸ்கள் இருக்கிறது. நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா ஏற்படும் வேகம் அதிகரிக்கிறது.

சென்னை அதிகம்
சென்னையில் தற்போது வடசென்னை மட்டுமின்றி தென் சென்னையும் பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. மொத்தமாக அனைத்து மண்டலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக சென்னையில் நேற்று ராயபுரத்தில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் மட்டும் மொத்தம் 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருவிக நகரில் 34 கேஸ்கள் ஏற்பட்டது. அங்கு மொத்தம் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று கோடம்பாக்கத்தில் 21 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு 199 பேருக்கு கொரோனா உள்ளது.

என்ன மருத்துவமனை
சென்னையில் அதிகமாக 3 முக்கியமான பெரிய மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நான்கும் ஆகும். தொடக்கத்தில் இருந்து இந்த 4 மருத்துவமனையில்தான் கொரோனா நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நான்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் ஆகும்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை
சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்த போதே இங்கு வெளி நோயாளிகள் வருகை தடை செய்யப்பட்டது. நான்கு மருத்துவமனையும் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால் இந்த நான்கு மருத்துவமனையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. போதுமான அளவில் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா நோயாளிகள் ஆயிரத்தை தாண்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எத்தனை படுக்கைகள்
சென்னையில் அதிகமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகள் உள்ளது. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக தலா 400 படுக்கைகள் என்று 1200 படுக்கைகள் உள்ளது. மொத்தமாக இந்த நான்கு மருத்துவமனையில் 1700 படுக்கைகள் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. இதுதான் தற்போது பிரச்சனையாகி உள்ளது.

என்ன பிரச்சனை
இது நோயாளிகள் எண்ணிக்கை மட்டும்தான். இது இல்லாமல் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் முடித்துவிட்டு முடிவுக்காக மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் சிலர் இருக்கிறார்கள். நேற்று மற்றும் நேற்று முதல் நாள் குணமடைந்த சிலர் உடனே டிஸ்சார்ஜ் ஆக முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனால் சென்னையில் மருத்துவமனைகளில் இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இடவசதி இல்லை
நேற்று காலையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பியுள்ள நிலையில் மதியம் ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியது. அதேபோல் நேற்று கீழ்ப்பாக்கத்திலும் வார்டுகள் நிரம்பியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. புதிய கொரோனா நோயாளிகளை எங்கே அனுமதிப்பது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. நேற்றே மாலையில் நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் சில கீழ்ப்பாக்கத்தில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு முயற்சி
கொரோனாவை தடுக்க அரசு தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக முயன்று வந்தது. மிக கடுமையான முயற்சிகளை கொரோனாவிற்கு எதிராக அரசு எடுத்து வந்தது. கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பாக படுக்கைகளை தயார் செய்து வைத்து இருந்தது. ஆனாலும் கூட திடீர் என்று கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் படுக்கைகள் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை இதனால் மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

ஏற்பாடு
இதனால் சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கைகள் தயாராக உள்ளது. இனி வரும் நாட்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உறுதியாகும் கொரோனா நோயாளிகள் அங்கு மாற்றப்படவுள்ளனர். அவர்கள் அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளனர். அதேபோல் சித்தா மருத்துவமனை மற்றும் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய நோயாளிகள் வர வர இந்த சிக்கல் தொடரும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications