சென்னை முதல் மும்பை வரை.. எல்லாம் ரெட் லிஸ்டில்.. இந்திய பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் சிக்கல்!
இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நகரங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நகரங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறையின் கணக்குப்படி இந்தியாவில் மொத்தம் 14378 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 480 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 11906 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1991 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் கிழமை
இந்த நிலையில் இந்தியாவில் வரும் திங்கள் கிழமையில் இருந்து முக்கியமான நகரங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்படாத பகுதிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பணிகள் மீண்டும் தொடங்கும். சில கட்டுபாடுகள் இருக்கும். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இயல்புநிலை திரும்பும் என்று அரசு கூறியுள்ளது.

ரெட் லிஸ்ட்
ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகளில், ரெட் லிஸ்டில் இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கும். இங்கு பணிகள் எதுவும் தொடங்காது என்று அறிவித்துள்ளது. அதாவது ஹாட் ஸ்பாட் பகுதிகளில் நிறைய பேருக்கு கொரோனா இருப்பதால் அங்கு ஊரடங்கு மே 3 வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் முக்கியமான நகரங்கள் திறக்கப்பட எப்படியும் மே 3ம் தேதி வரை ஆகும் என்கிறார்கள்.

மூன்று முக்கிய நகரங்கள் பாதிப்பு
இந்தியாவில் மிகவும் வளர்ந்த நகரங்கள்தான் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நகரங்கள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பை, ஆட்டோமொபைல் ஹப் எனப்படும் சென்னை, தலைநகரம் டெல்லி மூன்றும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நான்காக பிரிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நகரங்கள் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், பச்சை என்று பிரிக்கப்பட்டு உள்ளது. 100க்கும் அதிகமாக எங்கெல்லாம் கொரோனா நோயாளிகள் இருக்கிறார்களோ அதெல்லாம் சிவப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு கேஸ் கூட இல்லாத பகுதிகள் பச்சை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.20 கேஸ்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த இடம் மஞ்சள் என்றும் 20-99 இருந்தால் அந்த இடம் ஆரஞ்ச் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது .

சிவப்பு லிஸ்ட் முன்னேறிய நகரம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் சிவப்பு லிஸ்டில் இருப்பவை எல்லாம் பெரும்பாலும் முன்னேறிய நகரங்கள். மொத்தம் இந்தியாவின் முக்கியமான 20 நகரங்கள் இந்த சிவப்பு லிஸ்டில்தான் இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் 50%க்கும் அதிகமான கேஸ்கள் இந்த நகரங்களில் இருந்துதான் வந்துள்ளது.

சென்னையின் நிலை
இந்த சிவப்பு லிஸ்டில் இருக்கும் பகுதிகள் என்று பார்த்தால் சென்னை, டெல்லி, கொல்கத்தா , மும்பை, அஹமதாபாத், புனே, ஜெய்ப்பூர், போபால், இந்தூர், கோயம்புத்தூர் ஆகியவை முக்கியமான பகுதிகள் ஆகும். இந்தியாவின் பொருளாதாரம் இந்த நகரங்களை நம்பித்தான் இருக்கிறது. இந்த நகரங்கள் எல்லாம் கொரோனாவில் இருந்து மீண்டுவர இன்னும் பல மாதங்கள் ஆகும். இது இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

மும்பை பாதிக்கும்
முக்கியமாக மும்பையில் கொரோனா காரணமாக பங்கு சந்தை உட்பட வங்கி, பங்குகள் ரீதியான பணிகள் எல்லாம் பாதிக்கப்படும். சென்னையில் ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவை சந்திக்கும். போபால், இந்தூர், புனேவில் உற்பத்தி துறைகள் இழப்பை சந்திக்கும். கோவையில் பின்னலாடை நிறுவனங்கள் பெரிய சரிவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டு வருவது கடினம்
இப்படி முக்கியமான நகரங்கள் எல்லாம் சரிவை சந்தித்து இருப்பதால் இந்தியா வரும் நாட்களில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருவது என்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். இந்த நகரங்கள் மீண்டும் இயங்க தொடங்கி மீண்டும் உற்பத்தியை தொடங்கினால் மட்டுமே பொருளாதாரம் கொஞ்சம் சீராகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications