சாம்ராஜ்ஜியம் சரியுது.. கொலாப்ஸ் ஆகும் பிரிட்டன்! பிரதமர்கள் அடுத்தடுத்து ராஜினாமா!
லண்டன்: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இது பிரிட்டனில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்யும் 6வது பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவார்.
பிரதமர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதால் பிரிட்டன் தடுமாறியிருக்கிறது. கீர் ஸ்டார்மர் ஏன் ராஜினாமா செய்தார்? காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வந்த நிலையில், கட்சிக்குள்ளும் அவருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்தது. குறிப்பாக, கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் மான்செஸ்டர் முன்னாள் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைமை மாற்றத்திற்கான கோரிக்கை வலுப்பெற்றது. ஆண்டி பர்ன்ஹாம், ஸ்டார்மரின் தலைமைக்கு சவால் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கீர் ஸ்டார்மர், உரையின் இறுதியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
அவர் பேசுகையில், "அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் சரியான நபர் தானா என்ற கேள்வி எனது கட்சிக்குள் எழுந்தது. அதற்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த பதிலை நான் கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். நாட்டின் நலன் மற்றும் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நான் பதவியிலிருந்து விலகுகிறேன்," என்று குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டன் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்யும் 6வது பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற (Brexit) வாக்களித்ததன் 10-வது ஆண்டு நிறைவை நாடு நாளை அனுசரிக்க உள்ள நிலையில், இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்.
ஒரு காலத்தில் உலகத்தின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட பிரிட்டன், இப்போது சீட்டுக்கட்டு சரிவதை போல சரிய தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications