திடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்!
கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது
சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.. ஆனால் கமல்ஹாசன் வீட்டில் இல்லாத நிலையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மய்ய உறுப்பினர்கள் கொந்தளித்து விட்டனர்.. இது தொடர்பாக சர்ச்சையும் வெடித்தால் ஒட்டப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்!!
Recommended Video
இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது கொரோனா வைரஸ்.. இது ஒரு தொற்று நோய் என்பதால் அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது. எனவே, கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல... கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும், அந்த வீட்டில் உள்ள நபர்களை தனிமையில் இருக்குமாறும் மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசனையும் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

ஆழ்வார்பேட்டை
கொரோனா அச்சத்தால் ஏப்ரல் 6-ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்ததுடன், இது சம்பந்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு நோட்டீசும் ஒட்டி அறிவுறுத்தியது. இந்த வீட்டைதான் நடிகர் கமல்ஹாசன் மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.

மருத்துவர்கள்
"இப்படி ஒரு நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்' என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, கமல்ஹாசன் குடும்பமே கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

சுருதிஹாசன்
10 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஸ்ருதிஹாசன் நாடு திரும்பிய நிலையில், பாதுகாப்பு கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்... அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதேபோல கமல்ஹாசனின் அண்ணன் மகளான நடிகை சுகாசினி மணிரத்னம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய தனது மகனை கண்ணாடி பொருத்தப்பட்ட அறையில் தனிமைப்படுத்தியிருந்தார்.

ஈசிஆர்
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று காலை கமல்ஹாசனின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.. ஆனால் ஆழ்வார்பேட்டை வீட்டில் கமல் இப்போது இல்லை.. ஏனென்றால் கமல் இதை அலுவலகமாகத்தான் பயன்படுத்தி வருகிறார்.. அது மட்டுமல்ல, தற்சமயம் அவர் ஈசிஆரில் உள்ள வீட்டில்தான் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஆழ்வார்பேட்டை வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. கமல்ஹாசன் வீட்டிலேயே இல்லாத நிலையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மய்ய உறுப்பினர்களும் கொந்தளித்து விட்டனர்.

மய்ய உறுப்பினர்கள்
நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. விவகாரம் வெடிக்க ஆரம்பித்து, சர்ச்சையும் கிளம்பியதால் ஒட்டப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். இதன்பிறகே மய்ய உறுப்பினர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதில் தவறு நடந்து விட்டது என்று சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கமல் விளக்கம்
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், இமிகிரேஷன் அதிகாரிகள் தரும் பட்டியலை வைத்து நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. அதில் இந்த சிறு தவறு நடந்து விட்டது. இனிமேல் கவனமாக இருப்போம் என்று கூறினார். அதேபோல, கமல்ஹாசனும், "நான் தனிமைப்பட்டதாக சொல்லப்படும் தகவல் உண்மை இல்லை என்றும் ஆனால் வரும் முன் தடுக்க நானே 2 வாரமாக தனிமை மேற்கொண்டுள்ளேன்: என்றும் உடனடியாக விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications