அதிமுக தலைமை அலுவலக சாலைக்கு திமுக நிர்வாகியின் பெயர்.. சென்னை மாநகராட்சி முடிவு! யார் இவர்?
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த சாலைக்கு திமுக நிர்வாகியின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிர்வாகி யார்? அவர் திமுகவுக்கு எப்படி பங்களிப்பு செய்தார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகி நிலையில் கட்சியையை போன்றே அதிமுக தலைமை அலுவலகத்தையும் எடப்பாடி பழனிச்சாமியே கைப்பற்றினார்.
இந்நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் பெயரை பகுதியளவில் மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விபி ராமன் பெயர்
அதன்படி அவ்வை சண்முகம் சாலையின் ஒருபகுதியின் பெயரை மறைந்த திமுக நிர்வாகியான வேங்கட பட்டாபிராமன் நினைவாக விபி ராமன் சாலை என மாற்ற முடிவு செய்யப்பட்டது. விபி ராமன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் பெயர் மாற்றத்தை கையில் எடுத்தது.

மாநகராட்சி அனுமதி
அதன்படி அவ்வை சண்முகம் சாலையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலையின் பெயரை விபி ராமன் சாலை என மாற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வேங்கட பட்டாபிராமின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவரது வீடு இருந்த அவ்வை சண்முகம் சாலைக்கு விபி ராமன் சாலை என பெயர் மாற்ற சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

யார் இந்த விபி ராமன்?
விபி ராமன் திமுகவை சேர்ந்தவர். இவரது முழுப்பெயர் வேங்கட பட்டாபிராமன் .வழக்கறிஞரான இவர் சட்டப்படிப்பை முடித்திருந்தார். 1955ல் திமுகவில் இணைந்தார். திமுகவின் சட்ட திட்டங்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். இவர் ஈவெகி சம்பத் மற்றும் இரா செழியன் ஆகியோருடன் சேர்ந்து கட்சி விதிகளை வகுத்தார்.

திமுக செயற்குழுவில்
1977-1979 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். திமுகவின் செயற்குழுவில் இடம்பெற்றிருந்த இவர் எழுத்து, சினிமா துறைகளிலும் திறம்பட செயல்பட்டார். இவர் கவிஞர் கண்ணதாசனுக்கு நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications