அம்மா உணவகத்திற்கு மூடுவிழா?...நிர்வாகிகளுக்கு பறந்த வாய்மொழி உத்தரவு.. குறைக்கப்படும் ஊழியர்கள்?
சென்னை: நாடு முழுவதும் பாராட்டப்பட்ட, தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்று செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சமீப நாட்களாக ஆட்குறைப்பு நடப்பதாக தகவல்கள் வருகின்றன. முக்கியமாக சில வாய்மொழி உத்தரவுகள் காரணமாக அம்மா உணவகங்களுக்கு அரசு மெல்ல மெல்ல மூடு விழா நடத்துகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வர் தலையிட்டு அம்மா உணவகம் செம்மையாக நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்திய அளவில் பெரிய அளவில் கவனம் பெற்ற தமிழ்நாட்டின் சமூக நீதி திட்டங்களில் ஒன்றுதான் அம்மா உணவகம். இதை மலிவு விலை உணவக திட்டம் என்று அழைப்பதை விட சமூக நீதி திட்டம் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் ஏழைகள், கூலி வேலை பார்ப்பவர்கள் தொடங்கி பல இடங்களில் ஐடி பணியாளர்கள் வரை எல்லோருக்கும் சமமாக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது.
அதிலும் சென்னை போன்ற பெருநகரத்தில் இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டது பல லட்சம் மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக உருவெடுத்தது. முதலில் இந்த திட்டம் மலிவு விலை உணவகம் என்ற பெயரில்தான் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலை உணவு மிக முக்கியமான ஒன்று என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்டது. மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசிதீர்க்கும் ஒன்றாக மாறியது.

வரலாறு
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 2013 மார்ச் 19 அன்று மலிவு விலை உணவகம் என்ற பெயரில் ஒரே ஒரு உணவகம் சென்னை சாந்தோம் பகுதியில் உருவாக்கப்பட்டது. பின்னர் அன்று மாலையே மேலும் 15 இடங்களில் இந்த உணவகம் திறக்கப்பட்டது. பின்னர் 4 நாட்களில் அந்த உணவகங்கள் அனைத்தும் அம்மா உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த உணவகம் உடனடியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முக்கியமாக தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள், பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், வருமானம் குறைந்தவர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

விரிவுபடுத்தப்பட்டது
இதன் பின்தான் அம்மா உணவகம் மற்ற பகுதிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. காணொளி காட்சி மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாநகராட்சிகளில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். முழுக்க முழுக்க பெண்களால் இந்த உணவகங்கள் இயக்கப்பட்டதால் மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பெண்களுக்கும் வாழ்வாதாரமாக மாறியது. சென்னையில் மட்டும் இப்போது 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் அளவிற்கு இந்த திட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மருத்துவமனைகள்
பின்னர் மருத்துவமனைகளிலும் பல இடங்களில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அரசு பொது மருத்துவமனைகளில் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது மக்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. நோயாளிகள், அவர்களிடம் குடும்பத்தினர் உணவு வாங்க வெளியே செல்ல வேண்டாம், அதிகம் செலவழிக்க வேண்டாம் என்ற நிலையை இந்த திட்டம் ஏற்படுத்தியது. தற்போது அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பொங்கல், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

பல மாநிலங்கள்
தமிழ்நாடு அரசின் அம்மா உணவக திட்டத்தை பல மாநிலங்கள் கொண்டு வந்தன. ஆந்திர பிரதேசத்தில் "அண்ணா அம்ருத ஹஸ்தம்" என்ற பெயரில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் "இந்திரா கேன்டீன்" என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. அதன்பின் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தானிலும் இந்த திட்டம் போலவே கொண்டு வரப்பட்டது .

திமுக ஆட்சிக்கு வந்தும் கேள்வி?
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகம் மூடப்படுமோ என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவினரும், எதிர்க்கட்சிகள் சிலரும் இந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில்தான் சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டு அங்கு இருந்த ஜெயலலிதா புகைப்படம் கிழிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தனது கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்தார். அம்மா உணவகம் தொடர்ந்து செயலபடும் என்கிற அறிவிப்பும் வந்தது. அதோடு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் மயிலாப்பூர் சுப்பிரமணியம் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவருந்தினார்.

வரவேற்பு
அம்மா உணவகம் செயல்படும், அதன் பெயரை மாற்ற மாட்டோம் என்றும் முதல்வர் அறிவித்தார். முதல்வரின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. அதோடு முதல்வர் ஸ்டாலின், புத்தக பைகளில் இருக்கும் முன்னாள் அரசு தலைவர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு தேசிய அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் சிறப்பாக இருக்கிறது என்று பலரும் இந்த தொடர் மூவ்களை பாராட்டி இருந்தனர்.

வாய்மொழி உத்தரவு டார்கெட்
இந்த நிலையில்தான் நிர்வாக தரப்பின் வாய்மொழி உத்தரவு காரணமாக அம்மா உணவகங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி பல்வேறு வார்டு அம்மா உணவகங்களில் ஆட் குறைப்பு நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் 8-17 பேர் வரை பெண்கள் பணியாற்றுகிறார்கள். சமையல் செய்பவர்கள், சுத்தம் செய்பவர்கள், உணவு வழங்குபவர்கள் என்று இவர்கள் பணிகளை பிரித்து செய்கிறார்கள்.

டார்கெட் படி ஆட்கள் நியமனம்
இந்த அம்மா உணவகங்களில் 20 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உணவு விற்பனை ஆகிறது. இந்த நிலையில்தான் அம்மா உணவக வருமானத்தை பொறுத்து பணியாளர்களை குறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 20 ஆயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் வந்தால் 6 பேர்தான் பணியாற்ற வேண்டும், 50 ஆயிரம் ரூபாய் வரை வந்தால் 8 பேர் பணியாற்றலாம், 80 ஆயிரம் ரூபாய் வரை 10 பேர், 1. 20 லட்சம் ரூபாய் வரை 12 பேர், 1.60 லட்சம் ரூபாய் வரை 14 பேர், அதற்கு மேல் 16 பேர் பணியாற்றலாம் என்று வாய் மொழி உத்தரவு சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நிர்வாகம்
இதையொட்டி ஆட்குறைப்பும் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். டார்கெட் அடிப்படையில் பணிகள் நடக்கின்றன. இதை சேவையாக பார்க்காமல் வருமானமாக பார்த்து ஹோட்டல் போல நடத்துவதாக தகவல்கள் எழுந்துள்ளது. அம்மா உணவகம் சென்னை மாநகராட்சியின் கீழ் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது. பல்வேறு பணிகளுக்கிடையே அம்மா உணவக பணியும் சேர்வதால் அதிகாரிகள் நிர்வாகிக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது. அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த அதற்கென தனித்துறை அதிகாரி நியமித்து நடத்தலாம் அல்லது சமூக நலத்துறையின் கீழ் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூற்றாக உள்ளது. இந்நிலையில்தான் இந்த ஆட்குறைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முடிவு யார் எடுத்தாலும் அது சமூக நீதியுடன் செயல்படும் திட்டத்தை முடக்கும் செயல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பல இடங்களில் குறைப்பு
பல இடங்களில் சப்பாத்தி மாவு இல்லை என்று கூறி சப்பாத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. cost cutting செய்கிறோம் என்ற காரணத்தால் இப்படி செய்கிறார்களா உண்மையிலேயே சப்பாத்தி மாவு இல்லையா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு தற்போது மாநகராட்சித்தரப்பில் விளக்கம் அளிக்க்ப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் என ஷிப்ட் அடிப்படையில் வேலை என சில இடத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பணி வழங்குவதால் முழு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பாதி சம்பளம் மட்டுமே கிடைக்கும் சூழலில் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதாரம்
தற்போது அரசின் பொருளாதாரம் சரிவில் உள்ளது. அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டாலும் பெரிய லாபம் கிடையாது. கூடுதலாக ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை செலவு என்பதால் ஒருவேளை கொஞ்சம் கொஞ்சமாக அம்மா உணவகத்திற்கு மூடு விழா நடத்த யாரும் திட்டமிடுகிறார்களோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. நிதி நிலையை காரணம் காட்டி இப்படி செய்யக்கூடாது இது பெரும்பான்மை மக்களுக்கு உணவளிக்கு சமூக திட்டம் என்பது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

கோரிக்கை என்ன?
ஆனால் இந்த வாய்மொழி உத்தரவாகவே இருந்தாலும் உத்தரவு செயல்பட்டால் அதனால் பொதுமக்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு முதல்வர் உடனடியாக தலையிட்டு அம்மா உணவகங்களையும் அதன் ஊழியர்களையும் காக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதை வருமானம் தரும் ஒன்றாக பார்க்காமல் சேவை அமைப்பாக அரசு அணுக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கையும் நற்சிந்தனையாளர்களால் வைக்கப்படுகிறது.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications