கவுன்சிலர் சீட்டுக்கு வசூல்.. தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள்.. விஜய்க்கு போன ரிப்போர்ட்!
சென்னை: ஜனவரி மாதமே 28 மாவட்ட பிரதிநிதிகளின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக தவெக கூறி இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தவெகவில் கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாக உருவாகவில்லை. நகரங்களிலேயே கட்சி கட்டமைப்பு இன்னும் வலிமையாகாத சூழலில், கிராமங்களில் சொல்லவே தேவையில்லை. இதனால் தவெக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் இருந்து தவெக உடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றனர். ஊரக உள்ளாட்சியில் 20% பதவிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சி, 7 முதல் 9 மேயர் பதவிகளையும் எதிர்பார்க்கிறது. மறுபுறம் விசிகவும் 5% பதவிகளை எதிர்பார்க்கிறது. ஐயூஎம்எல் கட்சியும் மேயர் பதவி எதிர்பார்க்கிறது.
மதிமுகவும் ஒரு மேயர் பதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை விட்டுக் கொடுத்தால், தவெகவினர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமும் விஜய்க்கு உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால், கூட்டணிக்குள் மனஸ்தாபம் உருவாகும் என்று தவெக தலைமை கருதுகிறது.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் கொடுக்க தவெக மாவட்டச் செயலாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கவுன்சிலர் சீட் பெற ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கல்லா கட்டி இருக்கின்றனர். இதனால் கவுன்சிலர் சீட் கிடைக்கவில்லை என்றால், கட்சியினர் ஏராளமான ஆடியோக்கள் வெளியாகும் என்பதால் தவெக தலைமையும் அதிர்ச்சியில் உள்ளது.
இதுதொடர்பாக உளவுத்துறையும் முதல்வர் விஜய்யிடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. இதனால் தவெகவினர் உட்கட்சி மோதல் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகலாம் என்றும் தவெக தலைமை கருதுகிறது. இதனால் சிக்கல்கள் அதிகரிப்பதால், உள்ளாட்சித் தேர்தலை தவெக ஒத்தி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
