2 கோடி, 93 சவரன் தங்கம்.. சென்னையில் ஐபிஎஸ் குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக பறித்த தம்பதி
சென்னை: வீடு வாங்கி ஆசைப்படுவோரை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் சென்னையில் அதிகம். குறைந்தவிலையில் வீடு தேடுவோரை குறிவைத்தே பெரும்பாலும் மோசடிகள் அதிகம் நடக்கும். ஆனால் குறைந்த பணம் ஆனால் நம்ப முடியாத விஐபி ஏரியாவில் வீடு என்று சில ஆசை வார்த்தைகளை கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் இருக்கிறார்கள். அப்படித்தான் சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. வீடு வாங்க ஆசைப்பட்டவரிடம் ரூ.2 கோடி பணத்தையும், 93 சவரன் தங்க நகைகளையும் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 50 வயதாகும் கோமளவள்ளி என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறுகையில், "செங்கல்பட்டை சேர்ந்த யாஸ்மீன் (32), அவரது கணவர் விவேக் (34) ஆகியோர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக கூறியும், ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருக்கும் தாமிரா அடுக்குமாடி குடியிருப்பிலும் வீடுகள் வாங்கி தருவதாகவும் இவர்கள் இருவரும் ரொக்கமாக முன்பணம் வாங்கியிருக்கிறார்கள்.

மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறியும் இவர்கள் பணம் வசூலில் ஈடுபட்டார்கள். எனது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். மருத்துவ கல்லூரியில் 'சீட்டும்' வாங்கி தரவில்லை, ரூ.12 லட்சத்தையும் திருப்பி தரவில்லை. இதேபோல, வீடுகள் வாங்கி தருவதாக கூறி மாரிமுத்து, தாஹிரா மற்றும் கவுரவ் ஆகியோரிடம் ரூ.2 கோடியும், 93 கிலோ தங்க நகைகளையும் வாங்கி ஏப்பம் போட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்" இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மோசடிநபர்களான யாஸ்மீனும், அவரது கணவர் விவேக்கும் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில், தினேஷ் சவுத்ரி (29) மற்றும் அவரது தந்தை தேஜா ராம் (49) ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை திரிசூலம் பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மோசடியான நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்ப முடியாத விஷயங்களை யாராவது செய்து தருவதாக கூறினால், அதனை கண்ணை மூடிக்கொண்டு நம்பமால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். யாராவது பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும், கடன் கிடைக்கும், குறைந்த விலையில் இடம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினால், ஏமாறாமல் புகார் அளிப்பதே பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும். பணத்தை இழந்த பின்னர் புகார் அளிப்பதைவிட, வரும்முன் காப்பதே சிறந்தது.



Click it and Unblock the Notifications
