அடுத்த ரவுண்டுக்கு ரெடி.. வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது உருவான பின்னர் தீவிரமடைந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆந்திராவில் கரையைக் கடந்த ஒர்னாப் புயலானது படிப்படியாகத் தனது தீவிரத்தை இழந்து பலவீனமடைந்து வடக்கு திசை நோக்கி நகரும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 29) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (அக்டோபர் 29, 30) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும்.
தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், நவம்பர் 1, 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்.3-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே வியாழக்கிழமை (அக். 29) வட
தமிழகம், வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. மேலும், சிற்றாறு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 30 மி.மீ, பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 20 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
