ஜனவரி 4 வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்.. 6 மாதமாக புழல் சிறையில் தவிக்கும் செந்தில் பாலாஜி
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 6 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் எப்போது கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 5 மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமின் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி 6 மாத காலமாக சிறையில் தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி. அவருக்கு எப்போது ஜாமின் கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications