சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம்.. சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னை: நடிகை பாலியல் வழக்கு விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவலாளி மற்றும் பணியாளரை மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் நடிகை ஒருவர் புகார் அளித்தார். சீமான் குறித்து தொடர்ந்து சோஷியல் மீடியா மூலமாக குற்றச்சாட்டு கூறி வந்தார். சீமான் மீதான இந்தப் புகாரை கடந்த 2012 ஆண்டு அந்த நடிகை திரும்பப் பெற்றுவிட்டார். ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

சீமான் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்வதற்கு வளசரவாக்கம் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருடைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, பெங்களூரில் உள்ள நடிகையின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்து வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. வளசரவாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 24 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
ஜனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியூர் சென்றிருப்பதால் 4 வாரங்கள் காலஅவகாசம் வேண்டும் என்று போலீஸாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நடிகை பாலியல் வழக்கில் விசாரணைக்கு சீமான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒத்துழைக்காவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், ஒட்டப்பட்டவுடனேயே அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் கிழித்தெறிந்தார்.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலாளிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார் காவலலாளி அமல்ராஜை வெளியே இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றனர். ஆனால், அவர் ஏறவில்லை. இதனால், அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்டனர். ஆனால், அவர் தர மறுத்தார். துப்பாக்கியை பறிப்பதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கியை காவலாளி மேலே தூக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு போலீஸார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சம்மன் நோடீஸை கிழித்ததாக சீமான் வீட்டில் பணியாற்றும் சுபாகரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரை சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications