அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு.. அமித்ஷாவின் ஆசை வார்த்தையில் ஏமாற கூடாது! சு.வெங்கடேசன் பேட்டி
சென்னை: தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்று சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அதேபோல் தொகுதி மறுவரையறை குறித்து சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வர விஜய் உறுதி அளித்ததாக கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் 19 எம்பிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் பங்கேற்றார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் சமமான தொகுதி மறுவரையறை மசோதா என்பது என்னவாக வரப் போகிறது என்று தெரியவில்லை. அப்போது லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தினால் என்ன செய்வது என்பது குறித்து பேசப்பட்டது. பின்னர் ஏப்ரல் 16ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. அப்போது அமித்ஷா, அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு என்று கூறினார்.
அது சட்ட வடிவத்தில் இல்லை. அந்த ஆசை வார்த்தையை கூறி அனைத்து மாநிலங்களையும் நம்ப வைக்கும் முயற்சியை பாஜக எடுத்திருக்கிறது. அந்த ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. அதுவொரு கண் துடைப்பு நாடகம். அப்படி செய்வதன் மூலமாக நமது உரிமை பாதுகாக்கப்படாது. அதேபோல் மீண்டும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்ற சூழலே வரும்.
வடகிழக்கு மாநிலங்கள் எப்படி கையறு நிலையில் இருக்கிறார்களோ, அதுபோல் தென்னிந்தியாவில் சூழல் உருவாகும். அதனால் 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதுதான் முடிவு. இந்த முன் வைப்பை தான் முதல்வர் விஜய்யும் கூறினார். தொகுதி வரையறை கமிஷன் சர்வாதிகாரமான கமிஷனாக இருக்கிறது.
அந்த அமைப்பு நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லாத ஒன்றாக உள்ளது. அந்த கமிஷன் ஜனநாயக விரோதமானது. சட்டசபையிலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். இது கட்சியின் பிரச்சனை அல்ல.. தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனை. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் என்பதை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
