3 கோப்புகள் எங்கே? அப்போ திமுக ஊழலை விஜய் மறைக்கிறாரா? சிபிஎம் சண்முகம் மறைமுக கேள்வி
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லையா என ஆதவ் கேட்கிறாரே, விஜய் டேபிளில் உள்ள 3 கோப்புகளை எப்போது திறக்க போகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் தவெக உள்ளது. ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லா ஆட்சி காலத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வந்து சொல்லியிருக்கிறது.

3 கோப்புகள் தனது டேபிளில் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானாலும் திறப்போம் என நீண்ட காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி ஊழல், முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர், எங்களை பார்த்து கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எனவே திமுக ஆட்சியில் நடந்த முறைகேடு குறித்த கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதவ் சார்பில் நான் வழிமொழிகிறேன். எல்லார் ஆட்சி காலங்களிலும் ஆதரவு, எதிர்ப்பு என்பதை நாங்கள் எப்போதுமே மேற்கொண்டிருக்கிறோம்.
மக்களுக்கு சாதகமான திட்டங்களையும் சட்டங்களையும் தவெக அறிவிக்கும் போது அதை மார்க்சிஸ்ட் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. இதே மக்களுக்கு பாதகமானது தமிழகத்திற்கு எதிரானது என்றால் உறுதியாக நாங்கள் எதிர்ப்போம்.
எல்லா ஆட்சிகாலங்களிலும் எங்களது அணுகுமுறை இதுதான். ஒரு வேளை எங்களது அணுகுமுறை புரியாத காரணத்தினால் தவெக அமைச்சர்கள் இப்படி பேசுகிறார்களோ என தெரியவில்லை. நிச்சயமாக இந்த அணுகுமுறை தொடரும். எதற்காகவும் நாங்கள் எங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.
ஆதரவு, எதிர்ப்பு, இடித்துரைப்பது, எடுத்துரைப்பது எல்லாம் தொடரும். பட்டினப்பாக்கம் விவகாரத்தில் மீனவ குடியிருப்பை அகற்றிவிட்டு தலைமைச் செயலகம் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
முதல்வர் விஜய் நிச்சயம் மீனவர்கள் பக்கம்தான் நிற்பார் என ஆதவ் சொல்லியிருக்கிறார். ஆனால் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதே, அப்படியென்றால் அது முதல்வருக்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்பதை ஆதவ் அர்ஜுனா தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.
மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக- அதிமுக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பேசினார்கள், காசு கொடுத்ததால்தான் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தாரா? கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா? இல்லையா? திமுக ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்ட் தோழர்களால் சொல்ல முடியுமா?
எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுகவினர் தவெகவுக்கு வாக்களித்தனர். வெறும் இன்ஸ்டாகிராம் வைத்து உங்கள முடிச்சிட்டோம். ஊழல் சுத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த காலத்தில் நடந்திருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும். கடந்த தேர்தலில் ரூ 5 ஆயிரம் வாங்கினீர்களோ, அது போல் இந்த முறையும் ரூ 5 ஆயிரத்துடன் திமுகவினர் வருவாங்க. அதை வாங்கிக் கொண்டு தீபாவளிக்கு டிரஸ் எடுத்துக்கோங்க.
போன முறை மாதிரி இந்த முறையும் விசில் சின்னத்திற்கு போட்டு விடுங்கள். கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும் விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.
திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது. இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது. எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு அவர்களுக்கு 15 அமைச்சர் பதவிகளை கொடுத்து முதல்வராகியிருக்க முடியும்.
எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார், எல்லாம் சமூகநீதியில் அவர் உறுதியாக இருந்தார். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
