மேட்ச் டிக்கெட் இருந்தால் போதும்.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் கொடுத்த செம ஆஃபர்..!
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதல் ஆட்டம் நடைபெற்றது. துவக்க ஆட்டத்திற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சென்னையில் ஐபிஎல் போட்டி
இந்தி பாடகர் அரிஜித் சிங் பாடல், தமன்னாவிடன் நடனம் என ஐபிஎல் தொடக்க விழா கோலகலமாக நடைபெற்றது. வரும் 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. சென்னையில் சுமார் 4 ஆண்டுகளுக்குக் பிறகு ஐபிஎல் போட்டிகள் நடக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

டிக்கெட்கள் விற்பனை
முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் நள்ளிரவு முதலே காத்துக்கிடந்து வாங்கி சென்றனர். ஆன்லைன் டிக்கெட்டுகளும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைகளில் டிக்கெட் நேரடியாக கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டன. இதே போல் ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000 ஆகிய விலைகளின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனையானது.

மெட்ரோவில் சிறப்பு சலுகை
சென்னையில் நடைபெறும் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு சலுகைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்ட்டிகள் ஒளிபரப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய்
வடபழனி, திருமங்கலம், சென்ட்ரல் விம்கோநகர் .நந்தனம், ஆகிய 5 ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை பயணிகள் பார்க்கலாம். பயணச்சீட்டுடன் ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி எல்.இ.டி திரைகளில் ஐபிஎல் போட்டிகளை காணலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலவசமாக பயணிக்கலாம்
இதேபோல், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறும் நாள் அன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச பேருந்து மற்றும் ரயில் சேவை அதிகரிக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications