வளரும் சென்னை! வரப்போகும் மாற்றங்கள்! உங்கள் சாய்ஸ் என்ன? 25 ஆண்டுக்கான சர்வே ரெடி..
சென்னை: இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தச் சென்னை மாநகரம் எப்படி மாறப்போகிறது என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
அப்படி மாறும்போது என்னென்ன வசதிகள் இந்த மாநகரத்திற்குத் தேவைப்படும் என்பது பற்றி உங்களிடம் ஏதாவது ஐடியா இருக்கிறதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம்தான்.

வரப் போகும் 25 ஆண்டுகளில் எந்தெந்த இடங்களுக்கு ரயில் வசதிகள் தேவை? எந்த பகுதிக்கு பஸ் வசதி தேவை? பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் இல்லாத பகுதிகள் எவை? அந்தப் பகுதியின் உட்கட்டமைப்பை எப்படி விரிவாக்கம் செய்வது?....
இப்படி உங்கள் வசம் உள்ள பல யோசனைகளை அரசுக்குத் தந்து உதவினால், 25 ஆண்டுகள் கழித்து நாம் சந்திக்கப் போகும் மாபெரும் சென்னை பெருநகரத்தின் வளர்ச்சியைச் சரியாக முன்னேற்றமடைய வைத்துவிடலாம்.

அதற்காக மெகா ப்ளான் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 1189 சதுர கிலோமீட்டரில் உள்ள சென்னையை 5904 சதுர கிலோமீட்டர் ஆக மாற்றுவதற்கான திட்ட ஆய்வில் இறங்கி உள்ளது திராவிட மாடல் அரசு.
இந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்தே 2 ஆண்டுகள்தான் ஆகின்றது. அதற்குள் 25 ஆண்டுகளுக்கான திட்டத்தைத் தயாரிக்க இறங்கி இருக்கிறது என்றால் சும்மாவா?

அது குறித்து விரிவாகச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) சிறப்பு அதிகாரி ஜெயக்குமாரிடம் கேட்டோம். அவர், விரிவாகப் பேசினார்.
"சென்னை பெருநகரம் 1189 சதுர கிலோமீட்டரிலிருந்து 5904 சதுர கிலோமீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கடந்த 2 மாதங்கள் முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், திருத்தணி, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம் வரை சென்னையோடு சேர்க்க உள்ளனர். இதில் சென்னை பெருநகரத்திற்காக comprehensive mobility plan என்ற ஒன்றைத் தயாரிக்க உள்ளோம்.
அதாவது இன்னும் 25 வருடங்கள் பின்னால் நமக்கு என்ன மாதிரியான போக்குவரத்து வசதிகள் தேவைப்படும் என்பதற்கான திட்டம் என்று இதைச் சொல்லலாம்.

இதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக ஒரு நிறுவனத்திற்குத் தந்துள்ளோம். அவர்கள் இதற்காக 15 மாதங்கள் ஆய்வுசெய்து அதற்கான திட்ட அறிக்கையைத் தருவார்கள். வரும் 2024 ஜூனில் இந்த ஆய்வு முடிவடைய உள்ளது.
இப்போது அதற்காக சர்வே நடந்துவருகிறது. அதற்கான தரவுகளைச் சேகரித்து வருகிறார்கள். அரசின் பல துறைகளோடு சேர்ந்து அதற்கான விவரங்களையும் திரட்டி வருகிறார்கள்.

மேலும் இதற்காக 16 வகையான சர்வே செய்ய உள்ளோம். பேருந்து நிலையத்திற்குத் தினசரி எவ்வளவு மக்கள் வருகிறார்கள். சாலைகளில் தினம் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன. இதற்காக ஒவ்வொரு ஜங்ஷனிலும் கண்காணிப்பு கேமிராக்களை வைத்து அதற்கான புள்ளிவிவரங்களை எடுத்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக இப்படி அனைத்து வேலைகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வேலைகள் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ளது.

இவை போக 50 ஆயிரம் வீடுகளில் சர்வே எடுக்க இருக்கிறோம். அவர்கள் வேலைக்கு எப்படிப் போகிறார்கள். கடைத்தெருவுக்கு எப்படிச் செல்கிறார்கள். பள்ளிகளுக்குக் குழந்தைகளை எப்படி அனுப்புகிறார்கள்?
பொதுப் போக்குவரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள். தனிப்பட்ட வாகனங்களை எந்தளவுக்குப் பயன்படுத்துகிறார்கள். மெட்ரோ பயன்பாடு எந்தளவு உள்ளது? எது சௌகரியமாக உள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். இப்படிப் பல விதமாகத் தரவுகளை வீடு வீடாக எடுக்க இருக்கிறோம்.

கடந்த 18 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கான துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்து, இந்தப் பணியை முறைப்படி தொடங்கி வைத்தார்" என்றவர் மேலும் இந்த ஆய்வு குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
"வீடு வீடாக நடத்த உள்ள சர்வேவை ஆஃப் லைன் சர்வே என்போம். இந்த மாதிரிகளை மட்டுமே வைத்து 25 ஆண்டுகளுக்கான ஒரு முன்னோடி திட்டத்தைத் தீட்டிவிட முடியாது.

அதை மனதில் கொண்டு, ஆன் லைன் சர்வேவும் நடத்துகின்றோம். நாங்கள் வழங்கும் துண்டறிக்கையில் கியூஆர் கோடு உள்ளது. அதை ஸ்கேன் செய்தால், ஒரு படிவம் வரும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பினால் போதும்.
அப்படி இல்லை என்றால் https://cumta.tn.gov.in/#/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். இதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிவம் உள்ளது. மொத்தமாக 41 அடிப்படை கேள்விகள் உள்ளன. அதற்குப் பதிலளித்தாலே போதும்.

இந்த இரண்டு வகையான தரவுகள் திரட்டிய பின், கூகுள் டேட்டா மற்றும் மொபைல் டேட்டா ஆகியவற்றையும் எடுக்க உள்ளோம். இதுவரை இந்த வகையான டேட்டாக்கள் எடுத்ததில்லை. முதன்முறையாக இந்த டேட்டாவை எடுக்க உள்ளோம். அனைத்தையும் வைத்து ஒரு பருந்து பார்வையில் ஆய்வு செய்து திட்டத்தினை உருவாக்க உள்ளோம்.
கடந்த சில நாட்களில் 300 பேர் ஆன்லைன் மூலமாகப் பதிலளித்துள்ளனர். மக்களின் தேவை என்ன என்பதை அறிவதன் மூலம், சென்னையில் எங்கெல்லாம் ரயில் நிலையங்கள் தேவை, எங்கு எல்லாம் பேருந்து நிறுத்தம் தேவை, எங்கு எல்லாம் பார்கிங் வசதிகள் தேவை, மெட்ரோ பணிகளை எதுவரை விரிவாக்கம் செய்யலாம், இன்னும் எவ்வளவு பேருந்துகள் வருங்காலத்திற்குத் தேவைப்படும்? என ஆராய்ந்து 25 ஆண்டுகளுக்கான உட்கட்டமைப்பை உருவாக்க உள்ளோம்.
வடசென்னை எடுத்துக் கொண்டால், அங்கே நிறைய கண்டெய்னர்கள் வந்துபோகின்றன. சுமார் 6 ஆயிரம் ட்ரக்ஸ் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ட்ரக்குகளை சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. அதற்கான பார்கிங் வசதி இல்லை. இதற்காக பார்க்கிங் எங்கே அமைக்கலாம்? இவை எல்லாம் எங்களின் திட்ட ஆய்விற்குள் வர உள்ளன.
இந்தத் திட்ட அறிக்கையை, குறுகிய காலம், மத்திய காலம், நீண்ட காலம் என மூன்று விதமாகப் பிரித்து பணிகளைச் செய்ய உள்ளோம். இப்படி துல்லியமான தரவுகளை வைத்து ஆய்வு செய்வதன் மூலம் வருங்கால பிரச்சினைகள் சமாளிக்க நாம் முன்கூட்டியே தயாராகிவிட முடியும். அதற்காகத்தான் இந்த அரசு மின்னல் வேகத்தில் இப்பணிகளில் இறங்கி உள்ளது" என்கிறார்












Click it and Unblock the Notifications