நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்கள், தமிழக அரசியலையே பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புகளுக்கு இடையே நடந்த சமாதான முயற்சிகள் கைகொடுக்காத நிலையில், "மன்னிப்பு கடிதம்" விவகாரம் புதிய வெடிகுண்டாக மாறியிருக்கிறது. சிவி சண்முகம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டுமென எடப்பாடி சொன்ன நிலையில், அதெல்லாம் முடியாது! எனக்கு கட்சியே வேண்டாம் என கோபத்துடன் வெளியேறினாராம் சிவி சண்முகம்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதிலிருந்து கட்சிக்குள் அதிருப்தி பெருகத் தொடங்கியது. தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

Edappadi Palaniswami CV Shanmugam AIADMK

அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தது கட்சிக்குள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வேலுமணி - சி.வி.சண்முகம் அணியில் இருந்த எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதிமுக பிளவு

மேலும், அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடமும் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, வேலுமணி அணியும் இபிஎஸ் தரப்புக்கு எதிராக மனு அளித்தது. இந்த மோதலின் நடுவில், தவெக அரசு வேலுமணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதலமைச்சர் விஜய் அந்த அணியை அமைச்சரவையில் சேர்க்காமல் தள்ளிப்போட்டது. இதனால், வேலுமணி அணிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்தது.

இசக்கி சுப்பையா

அதற்குள், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், "இன்னும் எத்தனை பேர் கட்சி விட்டு வெளியேறப்போகிறார்கள்?" என்ற பதற்றம் அதிமுக தலைமையில் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்சியை காப்பாற்றவேண்டிய அவசரநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது.

வேலுமணி தரப்பு

சென்னை நகரில் அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் இருதரப்பும் சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில், "அதிமுகவில் வழிகாட்டு குழு அமைக்க வேண்டும், பொதுச்செயலாளர் அந்த குழுவின் முடிவுப்படி செயல்பட வேண்டும், நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும், பொதுக்குழு கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்" போன்ற நிபந்தனைகளை வேலுமணி தரப்பு முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

வழிகாட்டுதல் குழு

ஆனால், "வழிகாட்டுதல் குழு" அமைப்பது தனது அதிகாரத்தை குறைக்கும் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், மாவட்ட செயலாளர் பதவிகளை திரும்ப அளிப்பதிலும் பல கட்டுப்பாடுகளை விதித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சி.வி.சண்முகம் இந்த பேச்சுவார்த்தைகளில் ஆர்வமாக இல்லை என்றும், உடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதால் மட்டுமே அமைதியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அவர் நேரடியாக பேச்சுவார்த்தையில் கூட பங்கேற்கவில்லை என்கிறார்கள்.

மன்னிப்பு கடிதம்

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் அணிகள் இணைப்பு குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. "எப்படியாவது கட்சியை காப்பாற்ற வேண்டும்" என்ற நோக்கத்தில் சிலர் முயற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில், இபிஎஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கிய நிபந்தனை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, "மீண்டும் இணைய வேண்டுமெனில், முதலில் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்" என்பதே அந்த நிபந்தனையாம்.

சி.வி.சண்முகம்

இந்த தகவல் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்ததாம். குறிப்பாக, சி.வி.சண்முகம் கடும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. "நாங்கள் என்ன தவறு செய்தோம்? ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?" என்று அவர் ஆவேசமாக பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், ஏற்கனவே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்த சமாதான முயற்சி உடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெக

இதன் பின்னர், சி.வி.சண்முகம் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடந்தது. அதில் சி.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். "இனி அதிமுகவில் இருக்கலாமா? அல்லது வேறு அரசியல் முடிவு எடுக்கலாமா?" என்ற கேள்வியும் அந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, "சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையக்கூடும்" என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

அதிமுக அதிருப்தி

அதேபோல், சி.விஜயபாஸ்கரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் தவெக, அதிமுக அதிருப்தியாளர்களை அமைதியாக தனது பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. மறுபுறம், எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கிறார். இதனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி போராட்டம் இன்னும் பெரிய பிளவுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சி.விஜயபாஸ்கர்

மொத்தத்தில், "மன்னிப்பு கடிதம்" என்ற ஒரு வார்த்தை, அதிமுகவின் சி.விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம் ஆகியோரின் இணைப்பை உடைத்துவிட்டதாகவே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்தது போல, சமாதானம் கைகூடும் நேரத்தில் மீண்டும் அதிமுகவில் புதிய புயல் உருவாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+