"செருப்பு மாலை, கொலை பழி, துரோகம்.!" திடீரென ஆவேசமான சி.வி.சண்முகம்! ஓபிஎஸ் மீது கடும் தாக்கு
விழுப்புரம்: அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய சி.சி.சண்முகம், ஓபிஎஸ் அணியை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
அதிமுக தொடங்கப்பட்டு 51வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ராஜ்ய சபா எம்பி சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி சிவி சண்முகம், ஓபிஎஸ் அணியினரை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். மேலும், சில பரபர குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

சிவி சண்முகம்
இந்த நிகழ்ச்சியில் சிவி சண்முகம் பேசுகையில், "திமுக இயக்கம் என்ற தீய சக்தியை விரட்டி அடிக்க தொடங்கப்பட்ட இயக்கமான அதிமுக இப்போது 51ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் 32 ஆண்டுகள் அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து உள்ளது. இன்று யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆனால் அப்படி கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் சாதிக்க முடியவில்லை. நடிகர்களுக்கு ரசிகர் இருக்கலாம். அவர்களை மக்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

திமுக மீது தாக்கு
ஆனால், அதையும் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக எம்ஜிஆர் உள்ளார். பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் பார்த்த ஒரு இயக்கமாக அதிமுக இருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத தலைவராக உள்ளார். அவரது பேச்சைக் கேட்டாலே இது நமக்குப் புரிகிறது.

விலைவாசி
எடப்பாடி ஆட்சி நீடிக்குமா எனக் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் முதல்வர் எனப் பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி.. கொரனாவை சிறப்பாகக் கையாண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி என மத்திய அரசே பாராட்டி இருக்கிறது. ஆனால், திமுக அரசைப் பாருங்கள். அவர்கள் பதவிக்கு வந்தது முதலே விலைவாசி அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட் விலை அதிகரிக்கும். இதன் மூலம் அவர்களின் பினாமிகள் கொள்ளை அடிக்கிறார்கள்

மருந்து தட்டுப்பாடு
தமிழக அரசு செயல்படாத அரசாகவே உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் இப்போது மருந்து கட்டப்பாடு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சலுக்கு வழங்கும் மாத்திரைகள் கூட இல்லை. அப்படியொரு சூழல் தான் இங்கு நிலவுகிறது. அமைச்சர் ம. சுப்பிரமணியன் சுகாதாரத் துறையைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. மாறாகத் தனது உடம்பை காக்க மாரத்தான் ஓடிக் கொண்டு இருக்கிறார். மருந்து கொள்முதல் டெண்டரை முடிவு செய்ததே தட்டுப்பாட்டுக்குக் காரணம். சுகாதாரத் துறையே தமிழக அரசு கலைக்கப் பார்க்கிறது.

அதிருப்தி
மருந்து மாத்திரை வாங்கி தர இயலாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமிழக மக்கள் எதற்காக திமுகவுக்கு வாக்களித்தோம் என்று வேதனையில் உள்ளனர். குறுகிய காலத்தில் மக்கள் வெறுப்பினை பெற்றவராக ஸ்டாலின் உள்ளார். மின்சார கட்டணம், சொத்து வரி என அனைத்தும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திமுகவினரை விட வேறு யாராலும் நவீன முறையில் கொள்ளை முடியாது.. திமுக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர்.

இந்துக்கள்
தமிழ்நாட்டில் இப்போது மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். சினிமா துறையில் முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், இவர்களைக் கட்டுப்படுத்தும் நபராக அவர்கள் குடும்பத்தினர் உள்ளனர். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்வதைத் தான் முதல்வர் கேட்கிறார். மக்கள் பிரச்சினையைக் கேட்பதில்லை. இந்து மதம் பற்றி தவறான பேசினால் இந்து சமயநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு காது கேட்காது என்று தெரிவித்தார்.

நீட் விலக்கு
ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் நீட் விலக்கை முதல் கையெழுத்தாகப் போடுவேன் என்றார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த 16 மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் நீட்டை ரத்து செய்யவில்லை. நீட் விலக்கு விசாரணை ஜனவரி மாதத்திற்குத் தள்ளி வைக்கவும் தற்போதைய திமுக அரசே காரணம்.. தமிழகத்திற்கு விடிவு காலம் விரைவில் வர உள்ளது.. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வரக்கூடும்.. அப்போது தனது பதவி பறிபோகும் என்ற பயத்துடன் ஸ்டாலின் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஓபிஎஸ்
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாங்கள் கூட்டங்களை நடத்தி உள்ளோம். தொண்டர்கள் படை இருந்தால் ஓபிஎஸால் ஒரு கூட்டத்தை நடத்திக் காட்ட முடியுமா? ஜெயலலிதாவின் உருவப் படத்திற்குச் செருப்பு மாலை அணிவித்தவர் தான் ஓ. பன்னீர்செல்வம்! ஆனால் இன்று நடிக்கிறார். முதலமைச்சர் பதவி இல்லை என்ற உடன் சசிகலா மீது கொலைப் பழி போட்டவர். சசிகலா குடும்பம் கழகத்தில் இணையக் கூடாது என்றவர் ஓபிஎஸ். அதிமுகவிற்குத் துரோகம் இழைத்தவர் ஓபிஎஸ்.. துரோகம் இழைத்தவர்கள் நல்லா இருந்ததாகச் சரித்திரம் இல்லை" என்று அவர் கடுமையாகத் தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications