பொன்முடியை ஆட்டம் காண வைத்த தலித் அரசியல்! துரைமுருகன் தலை தப்பியது எப்படி?
சென்னை: உதயநிதிக்கு ஆதரவாக சீனியர் அமைச்சர்களை ஓரங்கட்டும் பணி திமுகவுக்குள் நடைபெற்று வருகிறது என்றும் அதன் தொடக்கம்தான் அமைச்சர் பொன்முடியின் அதிகார குறைப்பு என்றும் ஒரு கருத்து கட்சிக்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக வெறும் வதந்தியாக மட்டுமே பரவி வந்த செய்தி நேற்று முதல் உண்மையாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவையில் ஒரு மாற்றம் இருக்கும் என்று ஊடகங்கள் எதிர்பார்த்து வந்தன. ஆனால், அதில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது. உயர்கல்வி அமைச்சராக இருந்துவந்த பொன்முடியின் இலாக்கா, கோவி செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக பொன்முடிக்கு வனத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு ஊடகங்கள் மட்டுமல்ல; உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த பொன்முடியே 'ஷாக்' ஆகியுள்ளார். பலரும் துரைமுருகனின் இலாக்காவை முதல்வர் வட்டாரம் 'குறி'வைத்துள்ளதாகப் பேசிவந்த நிலையில் பொன்முடி பதவி குறைப்பு செய்யப்பட்டுள்ளார். இளம்வயது முதலே ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பராக இருந்து வந்த பொன்முடியின் இலாக்கா மாற்றம் சொல்லும் செய்திதான் என்ன?
இந்த இலாக்கா மாற்றம் சொல்வது ஒரே செய்திதான். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சமூகநீதி என்று பேசிக் கொண்டே உள்ளது. அதை ஆதரித்து விசிக குரல் கொடுத்து வருகிறது. என்னதான் விசிக தலித் அடையாளம் உள்ள கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சி திமுகவை தொடர்ந்து ஆதரித்து வருவதை ரஞ்சித் போன்ற தலித் இளம் செயற்பாட்டாளர்கள் விமர்சித்து வருகின்றனர். 'ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒரு தலித்தை அமைச்சராகப் போடுவது அல்ல சமூகநீதி. அதிகாரம் மிக்க பதவிகளில் ஒரு தலித்தை அமைச்சராக்குவதுதான் சமூகநீதி. அதை திமுக செய்யவில்லை' என்று சில காலமாகவே சமூக வலைத்தளங்களில் தலித் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தனர்.

இதனுடன் சமீபகாலமாக துணை முதல்வர் பதவியில் ஏன் திருமாவளவன் அமரக்கூடாது என்று விசிகவில் புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜூனா ஒரு திரியைப் பற்றவைத்தார். அதைத் தொடர்ந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள தலித் செயற்பாட்டாளர்கள் ஆதவ் கருத்தை ஆதரித்து கருத்துகள் கூறி எழுதினர். எவிடென்ஸ் கதிர் கூட, ஆதவ் அர்ஜூனாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.
இப்படி தலித்துக்கு துணை முதல்வர் பதவி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு அதிகாரம் மிக்க துறையில் அமைச்சர் பதவி என நீண்டகாலமாகக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதன் கூடவே பாமக தங்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு தலித்தை முதல்வராக அமரவைப்போம் என்று கருத்தை முன்வைத்தது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாகவே பொன்முடியின் இலாக்கா மீது முதல்வர் ஸ்டாலினின் கவனம் சென்றது. குறிப்பாக அவர் அரசு விழாவில் ஒரு பெண்ணைப் பார்த்து 'ஏம்மா நீ எஸ்சிதானே?' என்று பேசிய வீடியோவை போட்டு 'இதுதான் திமுகவின் உண்மையான சமூகநீதி' என்று எதிர்க்கட்சியினர் பரப்பினர். அது மட்டும் இல்லாமல் அடுத்த கூட்டம் ஒன்றில், 'என்ன பஸ்? ஓசி பஸ்' என்று திமுகவின் மிகப்பெரிய சாதனை திட்டமான மகளிர் கட்டணம் இல்லா பேருந்து சேவையைக் கிண்டலடித்தார்.

அதை எல்லாம் தாண்டி தொகுதியில் இவரது சாதிய மனோபாவம் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாகத் தொடர்ந்து தலைமைக்குப் புகார் போய் உள்ளது. கூடவே வழக்கு விசாரணையில் கூட ஸ்டாலினுக்கு பொன்முடி தலைவலியாக இருந்தார். ஒரு கூட்டத்தில் 'சில மூத்த அமைச்சர்களால் பிரச்சினை வருகிறது. இதனால் பல நாட்கள் எனக்கு தூக்கம் கெட்டுவிட்டது. காலையில் எழும்போதே என்ன பிரச்சினை வருமோ என்று அஞ்சிக் கொண்டுள்ளேன்' என முதல்வர் ஸ்டாலின் மிகப் பொறுப்பான விசயத்தை முன்வைத்துப் பேசிவரும்போது, அதைப் பற்றி கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் பொன்முடி கைதட்டிச் சிரித்தார். அது முதல்வர் மனதை மேலும் புண்படுத்தியது என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமாக உள்ளவர்கள்.
அதை எல்லாம் கடந்து உயர் கல்வித்துறையில் பொன்முடியின் ஆதிக்கம் அத்துமீறி செல்வதாகவும் சில ரிப்போர்ட் பறந்துள்ளது. இப்படியே போனால், அவர் இலாக்கா மீது மத்திய அரசின் கவனம் விழக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். அதை எல்லாம் உணர்ந்த ஸ்டாலின், ஒரே கல்லில் 2 மாங்காயை அடிக்க திட்டமிட்டார். திமுக அதிகாரம் மிக்க துறையைத் தலித் பிரதிநிதிகளுக்கு அளிக்கவில்லை என்ற கறையைத் துடைக்க அந்தத் துறையைச் சமத்துவபுரத்தில் வாழ்ந்து வாழ்க்கையில் உயர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளார். கூடவே ஆதிக்க சாதிய மனோபாவத்துடன் பொதுவெளியில் பேசி வந்த பொன்முடியையும் பதவி இறக்கம் செய்து தண்டித்துள்ளார் என்கிறார்கள்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் துரைமுருகன் தலையும் உருள இருந்தது. ஆனால் அவர் தப்பியுள்ளார். அதற்கு முதல் காரணம் ராமதாஸ். அவர் துணை முதல்வர் சர்ச்சை தொடங்கியது முதலே வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் திமுக அமைச்சரவை இல்லை என்று பேசிவருகிறார். இதற்கு முன்பு 5.5% உள் ஒதுக்கீட்டை அளித்ததால் வன்னியர் மக்கள் மத்தியில் எடப்பாடியின் செல்வாக்கு கூடியுள்ளது. அந்த மாதிரியான நேரத்தில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக உள்ள துரைமுருகன் மீது கைவைக்கக் கூடாது. அதில் எச்சரிக்கை தேவை என்ற முடிவை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அதைத்தாண்டிக் கடந்த 21 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் துணை முதல்வர் ஸ்டாலின் பதவி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் கலகலப்பாகப் பதிலளிக்கும் பழக்கம் கொண்ட துரைமுருகன் நாற்காலியை உதறித்தள்ளிவிட்டு வெளியேறினார்.
அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவியது. அந்தக் காணொளி திமுக இளைஞரணி தரப்பின் கவனத்திற்குச் சென்றது. அது அப்படியே திமுக முதல் குடும்பத்தினரின் பார்வைக்கும் சென்றுள்ளது. எனவே துரைமுருகன் அதிருப்தியில் உள்ள நேரத்தில் அவர் இலாக்காவில் கைவைத்தால் ஏதேனும் விபரீதம் ஏற்படலாம் எனப் பதவி பறிப்பை தள்ளிப் போட்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும் இந்த அமைச்சரவை மாற்றம் செந்தில் பாலாஜியின் வருகைக்காகக் காத்திருந்து செய்யப்பட்டுள்ளதால் திமுக சீனியர் அமைச்சர்கள் சிலர் கடுப்பில் உள்ளனர் என்றும் சொல்கிறார்கள். காலங்காலமாகக் கட்சியைக் காப்பாற்றிய தங்களைவிட, அதிமுகவிலிருந்து வந்த ஒருவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் கட்சிக்குள் ஒரு புகைச்சல் நிலவி வருகிறது. இந்த முறை நிதித்துறை மீண்டும் பிடிஆர் பழனிவேல் ராஜன் பக்கம் போகும் எனப் பலர் யூகித்த நிலையில், அதுவும் நடக்கவில்லை.
எப்படிப் பார்த்தாலும் இந்த அமைச்சரவை மாற்றம் ஒரு அறிகுறியை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது. உதயநிதிக்கு வசதியாக ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மூத்தவர்களை ஓரங்கட்டும் வேலைகளை ஸ்டாலின் எடுக்க தொடங்கிவிட்டார். அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் கட்சிக்குள் அதிகாரப்போட்டி நிலவிய போது, இப்படித்தான் ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒவ்வொருவராக மாற்றப்பட்டனர். அதைக் கதை மறுபடியும் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications