பேரன்புக்குரிய சிங்கப்பெண்களே..ஆண்களும் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்..முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
பெண்கள் முழுமையாக சுதந்திரம் அடைந்து விட்டதாக நான் கூற மாட்டேன். பல ஆண்களின் மனதில் இன்னமும் பெண்கள் என்றாலே அடிமைதான் என்ற எண்ணம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மகளிர் தினத்தை பெண்கள் மட்டுல்ல ஆண்களும் கொண்டாடக்கூடிய நாளாக மாற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திராவிட மாடல் அரசு பெண்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியுள்ளது. அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்து சிங்கப்பெண்களாக உயர்ந்து நிற்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாளாக அமைந்துள்ளது. அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 8 கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது. இலக்கியம் சமூக பணியில் தொண்டாற்றிய ஆர். கமலம் சின்னச்சாமி அவர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி.

சங்காலம் தொண்டே மகளிர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். பெண் பால் புலவர்கள் செய்யுள் இயற்றியுள்ளனர். மன்னனை கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு உண்டு. போர் நடைபெறும் போது இரண்டு மன்னர்களிடையே அவ்வையார் தூது சென்றார் அந்த துணிச்சல் இருந்தது.
பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது திராவிட ஆட்சியில்தான். பல இடங்களில் போராட்டம் நடந்த போது தனது மனைவியை அழைத்து சென்றவர் பெரியார். வீரம் மிக்க பெண்களைப் பார்த்து ஏராளமான பெண்கள் அரசியலுக்கு வந்தனர்.
பெண்கள்தான் பெரியார் என்று பட்டம் கொடுத்தனர். 1934 ஆம் ஆண்டு பெண்கள் மாநாட்டில் பட்டம் அளிக்கப்பட்டது. சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. 1938 இந்தி திணிப்பு போராட்டத்தில் பெண்கள் அதிகமாக பங்கெடுத்தனர். கைக்குழந்தையுடன் பலர் கைது செய்யப்பட்டனர்.

திராவிட இயக்கம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக துணிச்சல் கொண்டவர்களாக உருவாக்கியுள்ளது.
நிமிர்ந்த நன்னடை..நேர்கொண்ட பார்வையோடு பல சிங்கப்பெண்கள் இன்றைய மகளிர் தினவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியில் மகளிர் பங்கு மகத்தானது. அரசு துறையில் மகளிருக்கு 40 சதவிகிதிம், உள்ளாட்சித்துறை மகளிருக்கு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசுதான். டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்புத்திருமண உதவித்திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. திராவிட மாடல் ஆட்சி காலத்திலும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

பேருந்துகளில் மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கின்றனர் அது மகளிரின் உரிமை. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் மிச்சம். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை விட எத்தனை கோடி பெண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதுதான் நமக்குத் தேவை. புதுமைப்பெண்கள் திட்டம் மூலம் உயர்கல்வி பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பெண் ஓதுவார் இடம் பெற்றுள்ளார் இதுதான் திராவிட மாடல். நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். வட மாநில பெண் ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அவர் தேடி வந்தது தமிழ்நாடுதான். அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பெண்கள் முழுமையாக சுதந்திரம் அடைந்து விட்டதாக நான் கூற மாட்டேன். பல ஆண்களின் மனதில் இன்னமும் பெண்கள் என்றாலே அடிமைதான் என்ற எண்ணம் உள்ளது அதை மாற்ற வேண்டும்.
மகளிர் தினத்தை பெண்கள் மட்டுல்ல ஆண்களும் கொண்டாடக்கூடிய நாளாக மாற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications