டிசம்பர் 1 ம் தேதி கடைசி நாள்.. தமிழக விவசாயிகளுக்கு அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, 2026-2027 சம்பா பருவ காப்பீட்டிற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்திருப்பதாக கூறினார். அதன்படி நெல் பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு டிசம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
2026-2027-ம் ஆண்டில் நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைவாக பெறப்பட்டதன் காரணமாக முக்கிய அணைகளில் போதிய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. எனினும், ஆகஸ்டு மாத இறுதியில் மேட்டூர் அணையில் போதுமான நீர் வரத்து இருந்ததால், செப்டம்பர் 1-ந்தேதி முதல் சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான பாசன வசதியை உறுதி செய்யும் வகையில், முதல்வரால் மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது.
மேலும், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15-ந்தேதி முதல் பரவலாக பெய்து வருவதால், இயல்பாக ஆகஸ்டு 2-வது வாரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் செப்டம்பர் இறுதியிலிருந்து தான் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்திலும் விவசாயிகள் உரிய காலத்திற்குள் எளிதாக காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, 2026-2027 சம்பா பருவ காப்பீட்டிற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 1.12.2026 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 1-ந்தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
