விளாசிய அண்ணாமலை! பேச தாமதிப்பது ஏன்? மத்திய அரசை விமர்சித்த கையோடு போராடும் மாணவர்களுக்கு அட்வைஸ்
சென்னை: ''ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி இதுதான். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்?'' என பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை கேள்வி எழுப்பி மத்திய அரசை சீண்டி உள்ளார். அதுமட்டுமின்றி போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு முக்கிய கோரிக்கையை அண்ணாமலை வைத்துள்ளார்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி புறப்பட்டபோது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதோடு மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் அண்ணாமலை.
பாஜகவில் இருந்து விலகி 'வி தி லீடர்ஸ்' எனும் அமைப்பை தொடங்கி உள்ள அண்ணாமலை மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரு சீரான தன்மையை கொண்டுவந்ததாலும் கூட பின்தங்கிய நிலையில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எனும் தங்கள் கனவை நனவாக்க உண்மையான வாய்ப்பை வழங்கியதாலும், நீட் தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலை தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், மீண்டும் ஒருமுறை தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இது எத்தகைய மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சற்று எண்ணி பாருங்கள். இருப்பினும், இதற்குக் காரணமானவர்கள் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை.
இந்த தருணம் தான் ஆதங்கத்தை வெளிப்படுத்த வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு மாணவர்களை தள்ளி உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி இதுதான். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்?
பாஜக தலைமையிலான மத்திய அரசு அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும், தற்போதைய கவலைகளுக்கு தீர்வு காண விரைவான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் நான் வலியுறுத்துகிறேன். ஒரு நாட்டின் வலிமை என்பது அதன் நிறுவனங்கள் மீது இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்தால், நாம் நமது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்குகிறோம் என்று பொருள்'' என்று மத்திய அரசை அண்ணாமலை சாடியுள்ளார்.
அதேவேளையில், போராடும் மாணவர்களுக்கும் அண்ணாலை முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை, அதேபோல் மாணவர்களுக்கும், அவர்களுக்கு தலைமை தாங்குபவர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நடக்கும்போது சுயநல நோக்கங்களை கொண்டவர்கள் மேடையேறி போராட்டத்தின் ஆரம்பகால கோரிக்கைகளுக்கு தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காக போராட்டத்தைத் திசைதிருப்ப முயல்வதோ இயல்பான ஒன்றுதான். அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க மவுனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து விலகி செல்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அப்படி நடக்க அனுமதிக்காதீர்கள்'' என்று அட்வைஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
