காய்ச்சல் சீசன் வந்தாச்சு.. கண்டிப்பாக ‘இதை’ செய்யனும்! மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் அட்வைஸ்!
சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் மையத்தை மட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக விரிவாக்கம் தரம் உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," மருத்துவக் கட்டமைப்பில் தனியார் துறைக்கும் முக்கிய பங்கு உள்ள்து. தனியார் மருத்துவமனைகள் வழங்கும் தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் அருண்ராஜ்
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் தனியார் மருத்துவமனைகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். தனியார் துறையையும் உள்ளடக்கிய முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சூழலை உருவாக்குவது அரசின் நோக்கம் . மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள்
டெங்கு பரப்பும் கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும் என்பதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, தீராத உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே சிகிச்சை பெறாமல் உடனடியாக மருத்துவமனையை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சல்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 25 ஆயிரம் டெங்கு உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதில் பாதியளவே பாதிப்புகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இதை வைத்து டெங்கு பாதிப்பு குறைந்துவிட்டதாக கருத முடியா.
காய்ச்சல் பரவல்
அடுத்தடுத்த மாதங்களில் காய்ச்சல் பரவும் காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) மூலம் உறுப்பு தானம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
உறுப்பு தானம்
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் காத்திருப்பு பட்டியல் அடிப்படையிலேயே உறுப்புகள் ஒதுக்கப்படுவதாகவும், இதற்காக குழு மற்றும் நிலையான வழிகாட்டுதல்கள் உள்ளது. அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பதிவு செய்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், தகுதி மற்றும் பதிவு முன்னுரிமையின் அடிப்படையில் உறுப்புகள் கிடைக்கும் வகையில் அமைப்பு செயல்படும். மேலும், உறுப்பு தானம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில், எந்த அளவுக்கு கூடுதல் தகவல்களை வெளிப்படையாக வெளியிட முடியுமோ, அதனை எதிர்காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இடஒதுக்கீடு
7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் ஏற்கனவே முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
