Depression: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதி தீவிர புயலாக மாறலாம்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதி அதி தீவிர புயலாக மாறலாம் என்றும், இந்த புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தென் மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின. இதில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதற்கிடையே நேற்று முன் தினம் வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும். இது மேலும் தீவிரமடைந்து வரும் 26 ஆம் தேதி அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் வலுவடைந்து அடுத்த நாளில் 27 ஆம் தேதி தீவிர புயலாகவும், 28 ஆம் தேதி அதி தீவிர புயலாகவும் மாறி ஆந்திராவின் விசாகப்பட்டிணம் அருகே காலையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக புயல் கரையைக் கடக்கும் போது, பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இந்த வானிலை அமைப்புகளால், தமிழகம் மற்றும் ஆந்திராவில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஏற்கனவே அர்னாப் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் வானிலை மையம் ஒடிசா அருகே இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்து இருந்தது. தற்போது புயல் பாதை மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.




Click it and Unblock the Notifications
