ஆர்.பி.உதயகுமாரின் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் சென்டிமெண்ட்! இப்போதும் எப்போதும்! பின்னணி என்ன?
சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு எம்.எல்.ஏ.ஹாஸ்டல் சென்டி மெண்ட் ஒன்று உள்ளது.
அதாவது அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கூட அரசு பங்களாவில் குடியிருப்பதை தவிர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தான் தங்கினார்.
அதேபோல் இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவரான பிறகு எம்.எல்.ஏ.ஹாஸ்டலில் தான் தங்குவேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய ஆர்.பி.உதயகுமார் வருடத்தில் பாதி நாட்கள் காவி வேட்டி, கருப்பு வேட்டி, ஊதா வேட்டி என பக்திப்பழமாக காட்சியளிப்பார். இதேபோல் ஜோதிடத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதனாலோ என்னவோ சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை விட்டு வெளியேற அவருக்கு மனமே இல்லை போல். இன்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

எம்.எல்.ஏ.ஹாஸ்டல்
இதனால் இனி எம்.எல்.ஏ.ஹாஸ்டலில் தங்குவதை விட்டுவிட்டு சென்னையில் புதிய வீடு பிடித்து குடிபுகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதும் சரி எப்போதும் சரி இது தான் தனக்கு நிரந்தர தங்குமிடம் என எம்.எல்.ஏ.ஹாஸ்டலை கூறி வருகிறாராம் ஆர்.பி.உதயகுமார். அமைச்சராக இருந்தபோதே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியிருப்பதை தவிர்த்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் 'சி' பிளாக்கில் 10 -வது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தான் தங்கி வந்தார்.

ஜோதிடம் காரணம்?
இதற்கு அவர் அதிகம் நம்பும் ஜோதிடமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் உள்ள எம்.எல்.ஏ.அறைகள் என்றால் 10க்கு 10 என்ற அளவில் இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். ஒரு பெரிய ஹால், சமையலறை, இரண்டு அறைகள், பால்கனி, முற்றம் என அனைத்து வசதிகளும் அடங்கியதாக இருக்கும். எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்கு எந்தக் குறையும் இல்லாமல் சட்டசபை செயலகம் மூலம் அது பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

முன்னாள் அமைச்சர்கள்
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பலரும் எம்.எல்.ஏ.ஹாஸ்டலில் தங்குவதை கவுர குறைச்சலாக கருதக் கூடிய காலத்தில், அமைச்சராக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள போதும் சரி எம்.எல்.ஏ.ஹாஸ்டலே போதும் என்பதில் ஆர்.பி.உதயகுமார் உறுதியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
