ரீல்ஸ், மீம்ஸ்.. தனிநபர் வழிபாடு! விஜய்யின் 4 மாத ஆட்சி இதுதான்! சரமாரியாக விமர்சித்த தேவசகாயம்!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இருப்பினும் தமிழ்நாட்டின் தற்போதைய நிர்வாகம் சமூகத்தை மையமாக கொண்டதாக இல்லாமல்.. விஜய்யை ஒரு சூப்பர் ஹீரோவாகவும், ஏழைகளின் ரட்சகராகவும் காட்டும் ரீல்ஸ், மீம்ஸ் அடிப்படையிலான தனி நபர் வழிபாடு ஆட்சியாக சுருங்கிவிட்டதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து தி பிரிண்ட் இணைய இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. அவர் எழுதியிருப்பதாவது.. "இந்த ஆட்சியில் முரண்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால்தான், பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டத்தை விஜய் ரத்து செய்தார். ஆனால், அதற்கு பிறகு அந்த விளை நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்காமல், அவற்றை வேறு தொழில்துறை மற்றும் ரியல் எஸ்டேட் நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசு திட்டமிடுகிறது.
அதேபோல பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கொண்டுவரும் திட்டமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி 15 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட தலைமை செயலகம் கட்ட அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் என சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருந்தாலும் ஜோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் அரசியல் களத்திலும் விஜய் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறார். செப்.7 அன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாடை உவமையை சைகை மூலம் விஜய் கேலி செய்த விதம்.. ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அவர் இன்னும் ஒரு சினிமா நடிகராகவே அங்கு நடந்துக்கொண்டார்.
தவெக தேர்தலில் 108 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்தே பெரும்பான்மையை நிரூபித்தது. இது அரசியல் ஊழலை வளர்ப்பதாகவும், பாஜகவின் விருப்பத்திற்கு இணங்கி செயல்படுவதால் தமிழ் அடையாளம் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது.
இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு போன்ற இலவச நலத்திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், வெறும் நலத்திட்டங்கள் மட்டுமே உண்மையான நல் ஆட்சியாகிவிடாது. நல்லாட்சி என்பது மக்களின் பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தேவசகாயம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
