போதைப்பொருளால் உயிரிழப்பு ஏற்பட்டால்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்! - டிஜிபி அதிரடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் தீவிரமடைந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், போதைப்பொருள் உட்கொண்டு அதனால் மரணம் ஏற்படுகிறது எனில்.. சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று டிஜிபி அதிரடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

சமீபத்தில் தமிழக டிஜிபி, ஏடிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து.. கடந்த நவ.10ம் தேதியன்று, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் வாராந்திர சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மிக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை பணிகளில் மெத்தனப்போக்கு இருந்தால்.. அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக போதப்பொருள் உட்கொண்டு, அதனால் யாராவது உயிரிழக்கிறார்கள் எனில்.. சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது.. மத்திய ஏஜென்சிகள் ஏதாவது சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களை கைப்பற்றுகிறது எனில், அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக அனைத்து பகுதிகளில் உள்ள டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் ரோந்து பணிகளையும், 'விஷுவல் போலீசிங்' பணிகளையும் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
விஷுவல் போலீசிங் என்பது, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் சீருடையில் அவர்களின் கண்களுக்கு தெரியும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகும். இதனால் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறு சிறு மோதல்கள், திருட்டு சம்பவங்களை தவிர்க்க முடியும். இப்படியான குற்றங்களை செய்பவர்கள், சீருடையில் உள்ள போலீசாரை பார்த்ததும் பின்வாங்குவார்கள். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கும் இந்த யுக்தி பயன்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல மாநில அளவிலான ஆபரேஷனுடன், மண்டல மற்றும் மாவட்ட அளவிலான 'ஸ்ட்ரோமிங்' ஆபரேஷன்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 'ஸ்ட்ரோமிங்' என்பது, குற்றச் செயல்களை தடுப்பதற்காக அல்லது தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிப்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையினரும் இணைந்து நடத்தும் அதிரடி தேடுதல் வேட்டையாகும்.
போதைப்பொருள் தடுப்பு பணிகளுக்கு இந்த மாதிரியான நடவடிக்கைகளை மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
