முதல் இலக்கு.. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்.. சீக்ரெட்டாக செய்யப்படும் உதவி!
சென்னை: நடிகர் தனுஷ் உள்ளாட்சித் தேர்தலிலேயே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்கும் முடிவில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடவும், நற்பணி வேலைகளில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தவெகவை தொடங்கிய 2 ஆண்டுகளில் நடிகர் விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகி இருக்கும் சூழலில், பலரும் அதே ஸ்டைலை பின்பற்ற தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, தனி அமைப்பை நடத்தி வருகிறார். விரைவில் அந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாறும் என்று அறிவித்திருக்கிறார். இளைஞர்களின் வாக்குகளை குறி வைத்தே அண்ணாமலை களமாடி வருகிறார்.

மறுபக்கம் நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் அவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதோடு நிறுத்தி கொள்வார்கள். தற்போது தவெக ஆட்சியை பிடித்த பின், நற்பணி செய்வதிலும் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர்.
அதற்கேற்ப தனுஷ் ரசிகர் மன்ற கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் தனுஷ் அலுவலகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக சாப்பாடு போடப்பட்டது. இன்னொரு பக்கம் தனுஷ் பிறந்தநாள் விழா பெரிதாக கொண்டாடப்பட்டு ஆட்டோ கொடுக்கப்பட்டது. திருவண்ணாமலைக்கு படப்பிடிப்புக்கு சென்ற தனுஷ், 2 பெண்களின் கல்வி செலவை ஏற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் திருவண்ணாமலை படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் தொடர்ச்சியாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ராயன் படத்திற்கு பின் மாவட்டந்தோறும் சென்று ரசிகர்களை சந்திப்பதிலும் தனுஷ் தீவிரமாக இருந்தார். இதனால் தனுஷின் அரசியல் வருகை எப்போது என்பது மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. அதற்கேற்ப சட்டசபை தொகுதி வாரியாக ரசிகர் மன்ற உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தினார்.
தற்போது தனுஷ் அரசியல் பயணத்திற்கான அடுத்தக்கட்ட பாதையை அமைக்க தொடங்கி இருக்கிறார். எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்க முடிவு செய்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் தாமாக முன் வந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்றும், பிரச்சாரத்தின் போது தனுஷ் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ரசிகர் மன்ற பிரதிநிதிகளுக்கு தனுஷ் தரப்பில் சில பொருளாதார உதவிகளும் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தனுஷின் அரசியல் வேகம், தவெகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனுஷ் பக்கம் சென்று போட்டியிடுவார்களோ என்ற சந்தேகமும் வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
